நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், நேற்று மக்களவையில் இரண்டு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்தவர்களும், அவர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கோஷம் எழுப்பியவர்களும் நேற்றே கைது செய்தனர். அவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் யார்? யார்? என்ற தகவல் வெளியாகியுள்ளது.


சாகர் சர்மா:


மக்களவையில் இருந்த பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் அமர்ந்திருந்த இருக்கைக்குள் தாவிக்குதித்து ஓடியவர் சாகர் சர்மா. 27 வயதான சாகர் சர்மா டெல்லியில் பிறந்தவர். லக்னோவில் தன் பெற்றோர்கள் மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறார். பகத்சிங். சேகுவேரா பற்றிய கருத்துக்களையும், மார்க்சிஸ்ட் கருத்துக்களையும் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளார்.  இவர்தான் தன்னுடைய ஷூ உள்ளே மஞ்சள் நிற புகைக்குண்டை பதுக்கி உள்ளே கொண்டு வந்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் டெல்லியில் ஒரு போராட்டத்திற்காக செல்வதாக கூறிவிட்டு டெல்லி வந்துள்ளார்.


மனோரஞ்சன்:


மக்களவைக்குள் நுழைந்த மற்றொரு நபரான மனோரஞ்சன் மைசூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஒரு கம்ப்யூட்டர் பொறியியல் பட்டதாரி ஆவார். சாகர் சர்மா மக்களவைக்குள் குதித்த பிறகு, அவரைத் தொடர்ந்து மக்களவைக்குள் குதித்தார் மனோரஞ்சன். இவரது தந்தை தேவராஜே கவுடா, தனது மகன் ஏதேனும் தவறு செய்திருந்தால் தூக்கிலிட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.


நீலம் ஆசாத்:


சாகர் சர்மாவும், மனோரஞ்சனும் மக்களவைக்குள் குதித்து பீதியை கிளப்பிய பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கங்களை எழுப்பியவர் நீலம் ஆசாத் என்ற பெண். இவர் எம்.பி.எல். பட்டதாரி ஆவார். இவர் ஹரியானாவில் ஹிசாரைச் சேர்ந்தவர் ஆவார். பேராசிரியர் பணிக்கு நடத்தப்படும் தகுதித்தேர்வான நெட் தேர்வை கிளியர் செய்துள்ளார்.  37 வயதான நீலம் ஆசாத் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே நீலம் மற்றும் சிவப்பு நிற புகைக்குண்டுகளை வீசினார். மேலும், முழக்கங்களை எழுப்பினார். இவர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திலும் பங்கேற்றவர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பா.ஜ.க. எம்.பி. ப்ரிஜ்பூஷண்சிங் பாலியல் தொல்லை அளித்ததற்கு எதிராக நடந்த போராட்டத்திலும் இவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


அமோல் ஷிண்டே:


நாடாளுமன்ற வளாகத்தில் நீலம் ஆசாத்துடன் இணைந்து குரல் எழுப்பியவர் அமோல் ஷிண்டே. மகாராஷ்ட்ராவில் உள்ள லதூர் கிராமத்தில் பிறந்தவர் இவர். 25 வயதான இவருக்கு சிறு வயது முதலே ராணுவத்தில் அல்லது காவல்துறையில் சேர வேண்டும் என்று விரும்பியுள்ளார். சாதாரண பண்ணைத் தொழிலாளர்களின் மகனான இவர் காவல்துறை மற்றும் ராணுவ தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.


தனது தந்தையிடம் இவர் போலீஸ் தேர்வு முகாமில் பங்கேற்பதற்காக செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரது தந்தை தனது மகன் நன்றாக ஓடக்கூடியவன். அதனால் அவன் ராணுவம் அல்லது போலீசில் சேர விரும்பினான். ஆனால், அவன் பாராளுமன்றத்தில் என்ன செய்து கொண்டிருந்தான் என்பதே எங்களுக்குத் தெரியாது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.