2001ம் ஆண்டு நாடாளுமன்றம் தாக்கப்பட்ட அதே தினமான ( டிசம்பர் 13) நேற்று புதியதாக கட்டப்பட்ட நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள மக்களவைக்குள் இரண்டு இளைஞர்கள் முழக்கமிட்டவாறு சபாநாயகரை நோக்கி ஓடியும், அவர்கள் மறைத்து வைத்திருந்த மஞ்சள் புகைக்குண்டை வீசியதும் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


7 நாள் நீதிமன்ற காவல்:


நாட்டின் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடி என்று எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து பதற்றத்தை உருவாக்கிய சாகர் சர்மா, மனோரஞ்சன் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மக்களவைக்கு வெளியே ஆதரவுக்குரல் எழுப்பி முழக்கமிட்ட நீலம்தேவி என்ற பெண், அமோல் ஷிண்டே என்ற இளைஞர் என மொத்தம் 4 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட அவர்கள் நான்கு பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்களை டெல்லி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் 4 பேர் மீதும் ஊபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


நாடே பரபரப்பு:


கைது செய்யப்பட்டவர்களில் சாகர் சர்மா லக்னோவையும், மனோரஞ்சன் மைசூரையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்ற இருவருக்கும் மக்களவையை காண்பதற்கான நுழைவுச்சீட்டு கிடைக்காததால் அவர்கள் இருவர் மட்டுமே பார்வையாளர்கள் பகுதிக்குச் சென்றுள்ளனர். சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் தங்கள் காலணியில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற புகைக்குண்டை வீசியது எம்.பி.க்களை பீதியில் ஆழ்த்தியது.


நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  இவர்கள் நான்கு பேரின் கூட்டாளியான விஷால் நாடாளுமன்றத்திற்கு வரும் முன்னரே போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த திட்டத்திற்கு லலித்ஜா என்ற இளைஞர் இருப்பதாக கூறப்படுகிறது.


15 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்:


நீதிமன்றத்தில் இன்று நடந்த விவாதத்தில், போலீசார் தங்களது தரப்பின் வாதத்தில் இந்த சம்பவத்தின் நோக்கம் ஒருவரின் கருத்தை  வெளிப்படுத்துவதோ? அல்லது ஏதேனும் பெரிய சம்பவத்தை நடத்துவதா?  இந்த முழு சம்பவத்திலும் ஏதேனும் பயங்கரவாத அமைப்பு ஈடுபட்டுள்ளதா? என்று விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டனர். போலீசார் இவர்களை விசாரிக்க 15 நாட்கள் வேண்டுமென்று கேட்டனர். ஆனால், நீதிமன்றம் 7 நாட்கள் மட்டுமே கால அவகாசம் அளித்தது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சில துண்டு பிரசுரங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.


இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழ்நாடு எம்.பி.க்கள் 5 பேர் உள்பட 15 எம்.பி.க்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக உத்தரவிடப்பட்டது.