மக்களவை கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று மக்களவைத் தொடங்கிய உடனே இந்த விவகாரம் குறித்து அவையில் அமளி ஏற்பட்டது. இதனால், அவையை ஒத்திவைப்பதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். 


பா.ஜ.க. எம்.பி.க்கு மண்டை உடைந்தது:


இதன் காரணமாக, மக்களவையில் இருந்து ஒரே நேரத்தில் எம்.பி.க்கள் வெளியேறும்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.





அப்போது, பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி கீழே விழுந்தார். கீழே விழுந்த அவரது தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. இதையடுத்து, சக எம்.பி.க்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். தலையில் அடிபட்ட எம்.பி. பிரதாப் சாரங்கி, தான் படிக்கட்டின் அருகே நின்று கொண்டிருந்தபோது ராகுல்காந்தி தன் மீது எம்.பி. ஒருவரை தள்ளிவிட்டதாகவும், அதன் காரணமாகவே தான் கீழே விழுந்து தலையில் அடிபட்டதாகவும் கூறினார். நாடாளுமன்ற வளாகத்திலே எம்.பி. ஒருவர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிய தூக்கிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமித்ஷா பேசியது என்ன?


கடந்த செவ்வாய் கிழமை மக்களவையில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது, அவர் “இப்போது அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்ற அளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தினால் ஏழு பிறவிகளுக்கு நாம் சொர்க்கத்தை அடையலாம் என்றார்.


அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை மக்களவையில் ஏற்படுத்தியது. மேலும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். மேலும், அமித்ஷா தன்னுடைய பேச்சில் நாட்டின் முதல் அமைச்சரவையில் இருந்து அம்பேத்கர் ஏன் ராஜினாமா செய்தார்? பட்டியலின சாதி மற்றும் பழங்குடியினரை அப்போதைய அரசு நடத்திய விதம் பிடிக்காமலும், அவருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததாலும் அவர் அமைச்சரவையில் இருந்து விலகினார் என்றார்.

நாடு முழுவதும் குவியும் கண்டனம்:


அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அம்பேத்கர் மனுநீதிக்கு எதிராக இருந்தார். அதன் காரணமாகவே அவர்மீது இவ்வளவு வெறுப்பு பா.ஜ,.க.விற்கு இருப்பதாக காங்கிரஸ் அமித்ஷாவை விமர்சித்தது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்பேத்கரை நாங்கள் என்றும் மதிக்கிறோம் என்று பிரதமர் மோடி பேசினார். இந்த நிலையில், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் அமித்ஷாவின் பேச்சை கண்டித்து இன்று தி.மு.க. போராட்டம் நடத்தி வருகிறது.