படகில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் முழு அளவில் இருந்தும் விபத்துக்கு முழு பொறுப்பும் கடற்படை விரைவு படகுதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கேட் ஆப் இந்தியா பகுதியில் நேற்று மாலை எலிபெண்டா தீவுக்கு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்று கொண்டிருந்தது. பயணிகள் படகு பிற்பகல் 3:15 மணிக்கு புறப்பட்டு சென்றது. நீல் கமல் படகு வெளியூர்களில் இருந்து பலரை ஏற்றிச் சென்றது. அவர்களில் சிலர் முதல் முறையாக ஊருக்கு வருகை தந்தனர்.
அப்போது அங்கு அதிவேகமாக வந்த கடற்படை படகு கட்டுப்பாட்டை இழந்து நீல் கமல் படகு மீது மோதியது. 3:55 மணிக்கு நடுக்கடலில் விபத்து ஏற்பட்டது. இதில் படகு தண்ணீரில் மூழ்கியது. படகில் பயணம் செய்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
மாலை 4 மணியளவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஜவஹர்லால் நேரு ஆணையத்தின் (JNPA) பைலட் கப்பலின் பணியாளர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கி 56 பயணிகளைக் காப்பாற்றினர். தொடர்ந்து ஒரு சில தனியார் கப்பல்களின் ஊழியர்களும் இந்த மீட்பு நடவடிக்கையில் இணைந்து கொண்டனர். இறுதியில் கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மரைன் போலீஸ் ஆகியோர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடலில் தத்தளித்த 99 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இந்த கோர விபத்துக்கு முழு பொறுப்பு கடற்படைதான் என விபத்துக்குள்ளான படகின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “கடற்படைக்கு சொந்தமான அதிவிரைவு படகுதான் படகை சேதப்படுத்தியது. என் படகில் முழு பாதுகாப்பு அம்சங்களும் இருந்தன. ஜே.என்.பி.டி துறைமுகம், உரன், எலிபெண்டா தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்று வருகிறேன். கடலில் மூழ்கிய படகில் எந்த பழுதும் கிடையாது. படகுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “டிசம்பர் 18, 2024 அன்று சுமார் 4 மணி அளவில், என்ஜின் சோதனைக்கு உட்பட்ட கடற்படைக் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து, புட்சர் தீவில் உள்ள பயணிகள் படகு நீல் கமல் மீது மோதியது. நான்கு கடற்படை ஹெலிகாப்டர்கள், 11 கடற்படைக் கப்பல்கள், மூன்று கடலோர காவல்படை படகுகள் மற்றும் சம எண்ணிக்கையிலான மரைன் போலீஸ் படகுகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டன” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விபத்து குறித்து இரண்டு தனித்தனி விசாரணைகளுக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளனர். என்ஜின்கள் தரம் குறைவாக இருந்ததா என்றும் கடற்படை விசாரணை நடத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.