அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
கவுதம் அதானியின் நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் சந்தை ஆய்வூ நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து அறிக்கையை வெளியிட்டது. இதன்காரணமாக, கடந்த 8 நாட்களாக அதானி குழும பங்குகளில் விலை சரிவை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து, அதானி குழுமத்தில் எல்.ஐ,சி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் கடன் வழங்கி இருந்தது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். அதில், அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் ஒரே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரு அவைகளின் நடவடிக்கை மதியம் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி கேசி வேணுகோபால் கூறுகையில், “அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையை நாங்கள் விரும்புகிறோம். அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மத்திய அரசும் தயாராக இல்லை. அரசாங்கம் அனைத்தையும் மறைக்க விரும்புகிறது. அவை தற்போது அம்பலமாகி வருகின்றன” என தெரிவித்தார்.