அதானி குழுமத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதாக, எதிர்த்து காங்கிரஸ் கட்சி தரப்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.


ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி நிறுவனத்தின் பழைய கணக்கு வழக்கு மற்றும் பங்கு சந்தை சார்ந்த சந்தேகங்களை மீண்டும் ஆய்வு செய்து மோசடி செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இதற்கு கௌதம் அதானி மறுப்பு தெரிவித்தார். 2022ஆம் ஆண்டு ப்ளூம்பெர்க் பட்டியலின் படி மிகப்பெரிய முதலீட்டாளராக இருந்த அவர் இந்த ஆண்டு கடும் சரிவை சந்தித்து வருகிறார்.


இதற்கிடையில், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (NSE) அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகிய மூன்று அதானி பங்குகளை கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கை (ASM) கட்டமைப்பின் கீழ் வைத்துள்ளது. இந்திய சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEBI, அதிக ஏற்ற இறக்கமான பங்குகளை கண்காணிக்க பயன்படும் என கூறப்பட்டுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க்  அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. மேலும் அதானி குழுமத்தைச் சார்ந்த 7 நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பான முறையில் வலுவாக காட்டுகிறது என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


 இதனால், அதானி உள்ளிட்ட பலநிறுவனங்களின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய இரண்டிலும் கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்தன. அண்மைக்கால வரலாறு காணாத அளவில், பல பங்குகளில் சரிவுகள் இருந்தன. 


குறிப்பிடத்தக்க வகையில், அதானி எண்டர்பிரைசஸ் புதன்கிழமை அதன் ரூ.20,000 கோடி ஃபாலோ-அப் பொதுப் பங்களிப்பை (FPO) திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களின் பணத்தை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது. அமெரிக்க ஷார்ட்செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி எண்டர்பிரைசஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 


இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு நாட்களாக அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற இருஅவைகளும் முடங்கின. அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நிமிடம் கூட அவகாசம் அளிக்காததால் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


இதற்கிடையே, நாடு முழுவதும் பிப்ரவரி 6ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. இந்நிலையில், அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மௌனம் காத்து வருகிறார். இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் இன்று நடத்துகிறது.