நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்ட நிலையில் 16வது நாளாக அலுவல் பணிகள் முடங்கியது. 


நடப்பு நிதியாண்டிற்கான  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து  கூட்டத்தொடரின் 2-ஆம் பாதி கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கியது. அன்றைய நாளில் இருந்து லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி பேசிய விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரம், அதானி விவகாரம் ஆகியவை நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்னைக்கு வழிவகுத்து வந்தது.


முன்னதாக கடந்த மார்ச் 29 ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். உடனடியாக இரு அவைகளும் ஏப்ரல் 3 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 3 ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில்  மறைந்த புனே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பபட் , முன்னாள் எம்.பி. இன்னசெண்ட் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு முதல் பாதி ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் பாதியில்  எதிர்க்கட்சியினர் அதானி குழும மோசடி குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஈடுபட்டனர். இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 


இதற்கிடையில் நேற்று நாடாளுமன்றத்திற்கு எதிர்க்கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து வந்தது அமளியில் ஈடுபட்டனர. இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இப்படி 15 நாட்களாக நாடாளுமன்ற அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டதால் கடைசி நாளான இன்றாவது நாடாளுமன்றம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 


இதனிடையே பிரதமர் மோடி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பங்கேற்றார். இன்றும் கருப்பு சட்டை அணிந்து வந்த எதிர்க்கட்சியினர்  அமளியில் ஈடுபட்டதால்  மக்களவை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 16 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் பாதி முழுக்க வீணானது என்பது குறிப்பிடத்தக்கது.