தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களில் 91 சதவீத பேருக்கு XBB வகை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 200 ஐ கடந்தது தினசரி தொற்று பாதிப்பு பதிவானது. நேற்று மட்டும் 242 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் புதிதாக 4,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23,091 ஆக உயர்ந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்தவர்களுக்கான சிகிச்சை முறை பற்றியும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தனியார் மருத்துவமனைகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 91 சதவீத பேருக்கு ஒமிக்ரான் வகையான XBB வைரஸ் மாறுபாடு கொண்ட கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் மார்ச் வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 144 பேரின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 86 மாதிரிகள் தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களிடம் இருந்தும், 36 மாதிரிகள் சுற்றுபுறத்தில் இருந்தும், 20 மாதிரிகள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம் இருந்து எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த 144 மாதிரிகளில், 131 மாதிரிகளில் XBB மாறுபாடு கொண்ட கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 144 மாதிரிகளில் 10 பேருக்கு BA.2 வகை தொற்றும், 2 பேருக்கு BA.5 வகை கொரோனா தொற்றும், ஒருவருக்கு B.1.1 வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளது.


XBB வகை தொற்று: இந்த XBB வகை தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது பாதிப்பு எண்ணிகை அதிகரித்து வருகிறது என சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகை கொரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் இல்லை எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த வகை கொரொனா வைரஸ் வேகமாக பரவும்தன்மை கொண்டிருந்தாலும் இதனால் பாதிப்புகள் குறைவு தான் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கூட்ட நெரிசல் அல்லது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.