கோட்டா நகரில் உள்ள நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் ஜேஇஇ தேர்வுக்காக தயாராகி வந்த 20 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 24 மணி நேரத்தில் இரண்டாவது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றிபெறாத மாணவர்கள், கடும் மன அழத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, நீட் தேர்வு காரணமாக நடக்கும் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் மனதை பதற வைக்கும் வகையில் உள்ளது.
மாணவன் மீண்டும் தற்கொலை:
இம்மாதிரியான சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டும் நடப்பதில்லை வெளிமாநிலங்களிலும் நடைபெறுகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பயிற்சிகளை வழங்கும் முன்னணி பயிற்சி மையங்கள் கோட்டாவில்தான் அமைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், கோட்டாவில் உள்ள பயற்சி மையங்களில் சேர்ந்து, நுழைவு தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். ஆனால், மன அழுத்தம் காரணமாகவும் தேர்வில் பயற்சி பெற முடியாத காரணத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது.
கோட்டாவில் நடந்தது என்ன?
இந்த நிலையில், ஜேஇஇ நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்த 20 வயது மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த மாணவரின் பெயர் அபிஷேக் லோதா. தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "என்னால் படிக்க முடியவில்லை. நான் JEE தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். ஆனால், அது எனக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. மன்னிக்கவும்" என குறிப்பிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணாவைச் சேர்ந்த அபிஷேக் லோதா, கடந்த மே மாதம் ஜேஇஇ தேர்வுக்குத் தயாராக கோட்டாவுக்குச் சென்றுள்ளார். இதுகுறித்து அபிஷேக்கின் மாமா அஜய் கூறுகையில், "படிப்பில் சிறந்து விளங்கிய அவர், பயிற்சிக்காக கோட்டாவுக்கு வர வேண்டும் என்று அவரே விருப்பப்பட்டுள்ளார்.
தினமும் அவரிடம் பேசுவேன். ஆனால், அழுத்தம் இருப்பதாக அவர் வெளிப்படுத்தியதில்லை. எல்லாம் நல்லா இருக்கு. நல்லா நடக்குதுன்னு எப்பவும் சொல்றார். அந்தச் சம்பவத்துக்கு முந்தின நாள் சாயங்காலம்தான் கடைசியாப் பேசினோம். அப்போ கூட, நான் ஆயத்த வேலைகளில் மும்முரமா இருக்கேன்'னு அவர் எங்களிடம் சொன்னார்" என்றார்.