அசாமில் பானிபூரிக்கான தண்ணீரில் சிறுநீரைக்கலந்த கடை உரிமையாளரின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
இன்றைய காலத்தில் பெரிய ஹோட்டலுக்குச் சென்று மக்கள் சாப்பிடுவதைக் காட்டிலும் தெருவோரக்கடைகளில் சாப்பிடுவதை மக்கள் விரும்புகின்றனர். அதற்கேற்றால் போல் பெரிய கடைகளில் கிடைக்கும் நான், காளான், ப்ரைடு ரைஸ், மசாலா பூரி, நூடில்ஸ், கறி தோசை போன்ற பல வகையான உணவுகள் கிடைக்கின்றது. இதில் பல வகையான உணவுகள் இருந்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய உணவுப்பொருளாக உள்ளது பானிபூரி. குறிப்பாக இந்தியாவில் அதிகளவில் மக்கள் இதனை சாப்பிடத்தொடங்கிவிட்டனர். முன்பெல்லாம் பானி பூரி என்பது வடமாநிலங்களில் தான் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களிலும் மக்களிடம் பிரபலமடையத்தொடங்கியது.
அதிலும் தெருவோரங்களில் விற்பனையாகும் பானிபூரிக்கு தான் மவுசம் அதிகம் என்றே கூறலாம். அந்தளவிற்கு அங்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில் தான் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தரமான உணவுப்பொருள்களைத்தான் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தப்போதும் தரமான உணவுப்பொருள்களை பல கடைகளில் வழங்கப்படுவதில்லை என்று தான் கூற வேண்டும். சில நேரங்களில் அதிகாரிகள் தலையிட்டு தரமில்லாமல் வழங்கப்படும் கடைகளுக்கு சீல் வைத்தும் வருகின்றனர்.
ஆனால் இதனையெல்லாம் சற்றும் யோசிக்காமல், மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடிய பானிபூரியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள அத்கான் பகுதியைச்சேர்ந்த தெருவோரக்கடை உரிமையாளர் அதனுடள் சிறுநீரைக் கலந்திருக்கிறார். இவர் செய்யும் இச்செயலை அருகில் இருந்தவர் யாரோ வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததைக்கண்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
20 விநாடிகளே இருக்கும் இந்த வீடியோவில் தெருவோரக்கடை நடத்தும் நபர் தன்னுடைய ஸ்டாலுக்கு பின்னால் நின்று ஒரு குவளையில் சிறுநீரை பிடித்து அதனை மெதுவாக பானிபூரிக்கு பயன்படுத்தப்படும் தண்ணீரில் கலக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வீடியோவினை பார்க்கும் யாராக இருந்தாலும் இனி பானி பூரி சாப்பிடுவதை நிச்சயம் விரும்ப மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு அந்த வீடியோ மக்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.