இந்தூரில் வளையல் வியாபாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வளையல் வியாபாரம் செய்யும் நபரை திடீரென ஒரு கும்பல் சுற்றிவளைத்துள்ளது. அந்த கும்பல் அவரிடம் பெயர் கேட்டுள்ளது. அந்த நபர் ஓர் இஸ்லாமிய பெயரைச் சொல்ல அவ்வளவுதான், அந்தக் கும்பல் அவரைத் தாக்கத் தொடங்கியுள்ளது. கருணையே இல்லாமல் அந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ காண்போரை கலங்கச் செய்யும்.


இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், நான் என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள்ளேயே தாக்கப்பட்டேன். எவ்வளவோ கெஞ்சியும் என்னை அவர்கள் விடவில்லை. நான் தொழிலுக்காக வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை அவர்கள் எடுத்துக் கொண்டனர். அத்துடன் நான் வைத்திருந்த வளையல்களையும் அவர்கள் உடைத்துவிட்டனர் என்று கண்ணீர் மல்கக் கூறினார்.


இந்தச் சம்பவம் குறித்து இந்தூர் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் பாக்ரி கூறும்போது, இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோவின் அடிப்படையில் குற்றவாளிகளை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்.


வீடியோவில் இருந்த காட்சிகள்:


இணையத்தில் வெளியான அந்த அதிர்ச்சி வீடியோவில் இந்தூரின் பான்கங்கா வீதியில் வளையல்களை விற்றுக் கொண்டு வருகிறார் வியாபாரி ஒருவர். அப்போது ஒருசிலர் அந்த நபரை சுற்றிவளைத்து அவருடைய பெயரைக் கேட்கின்றனர். அந்த நபர் தனது பெயர் தஸ்லீம் எனக் கூறுகிறார். உடனே அந்த கும்பல் அவரைத் தாக்க ஆரம்பிக்கிறது. கும்பலில் உள்ள ஒருவர் இந்த ஆளிடம் இருந்து என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார். பின்னர் அவரே வாருங்கள் இவரைத் தாக்குங்கள் எனக் கூறுகிறார். 4 பேர் சூழ்ந்து தாக்குகின்றனர். தஸ்லீமால் தப்பிக்க முடியவில்லை.
இந்தக் காட்சி கடும் அதிர்ச்சியைத் தருகிறது.




இதற்கிடையில் மாவட்ட எஸ்.பி. முன்வைத்துள்ள கோரிக்கையில், நாங்கள் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மக்கள் சமூகவலைதளங்களில் வரும் மத ரீதியான வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். சமூகவலைதப் பதிவுகளை கவனமாகக் கையாள வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.


இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் நரோட்ட மிஷ்ரா கூறுகையில், பாதிக்கப்பட்ட நபர் இந்துப் பெயரைக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வளையல் விற்றுவந்துள்ளார். அவரிடம் இரண்டு ஆதார் அட்டைகள் இருந்துள்ளது. அவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். விசாரனை நடக்கிறது என்று கூறினார்.