போலீசாரின் கடமை உணர்ச்சிக்கு சில சமயங்களில் அளவிருப்பதில்லை. அது உள்ளூர் போலீசாக இருந்தாலும் சரி, வெளி மாநில போலீசாக இருந்தாலும் சரி வெளிநாடு போலீசார் இருந்தாலும் சரி, எல்லா போலீசும் ஒரே மாதிரி தான். அது அவ்வப்போது வெளிபட்டு வரும். அப்படி தான் இப்போது ஒரு சம்பவம் வெளிவந்துள்ளது. 


 


மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் நானாபெட் என்ற இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தபபடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. போக்குவரத்து போலீசாருக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற விவகாரமாச்சே. அவர்களும் வழக்கம் போல வாகனங்களை பறிமுதல் செய்யும் வாகனம் உள்ளிட்ட தங்களுக்கான உபகரணங்களுடன் அங்கு புறப்பட்டனர். எதிர்பார்த்தபடியே வழியை மறித்து நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எந்த விசாரணையும் இல்லாமல், நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தையும், தங்களது பறிமுதல் வாகனம் மூலம் அடுத்தடுத்து பறிமுதல் செய்யத் தொடங்கினர். 




அதுவரை எல்லாம் முறையாக தான் நடந்தது. திடீரென ஒரு கூச்சல் எழுந்தது. ‛நான் இருக்கேன்... நான் இருக்கேன்..’ என ஒருவர் ஓலமிடும் சத்தம் இது. என்னவென்று அப்பகுதியினர் திரண்டு வந்து பார்த்தால், பைக்கில் ஒருவர் அமர்ந்திருக்க, அவரோடு சேர்த்து பைக்கை பறிமுதல் செய்தது போக்குவரத்து போலீசார். பறிமுதல் வாகனத்தில் கட்டி, அவரது பைக்கை தூக்கிய போது, அமர்ந்திருந்த நபர் பயத்தில் கத்தியும், போலீசார் அதை கண்டுகொள்ளவில்லை. போலீசாரின் இந்த நடவடிக்கை முழுவதையும் அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி, அதன் பின் அனைத்து வீடியோ மற்றும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். 






 


அது வைரலாக மாற, எங்கு பார்த்தாலும் புனே போலீசார் செய்த சாகசம் தான் பேசப்பட்டது. இதற்கு பலரும் தங்களுக்கு கண்டனத்தை பதிவு செய்தனர். ஒரு கட்டத்தில் எதிர்ப்பு வலுவானது. இதைத் தொடர்ந்து புனே போலீஸ் அதிகாரிகள் அது குறித்து கருத்து தெரிவித்தனர். அதில் ‛வாகனத்தை பறிமுதல் செய்த போது, அதன் உரிமையாளர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து பைக்கில் அமர்ந்து கொண்டதாகவும். அவர் இறங்க மறுத்ததால் அவரையும் சேர்த்து ஏற்ற வேண்டியதாயிற்றும் என்றும், பின்னர் அவர் தன் தவறை உணர்ந்து அபராதம் செலுத்திவிட்டார் என்றும். அதே நேரத்தில் போலீசாரும் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதால், ஒரு போலீஸ் காரர் மற்றும் ஒப்பந்த ஊழியர் மீது இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,’ தெரிவித்தனர். 


வாகன ஓட்டியுடன் வாகனத்தை பறிமுதல் செய்த புனே போலீசாரின் இந்த நடவடிக்கை தற்போது தேசிய வைரலாக மாறியிருக்கிறது.