பெங்களூருவின் புறநகர் பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக போலி அடையாள அட்டைகளுடன் வசித்து வந்த  பாகிஸ்தானியர் ஒருவரை அவரது மனைவி மற்றும் உறவினர்களுடன் ஜிகானி போலீசார் கைது செய்தனர். மத்திய விசாரணை அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


சென்னை போலீசார் அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜிகானியில் உள்ள வாடகை வீடு ஒன்றில் சோதனை நடத்திய போலீசார் குற்றவாளிகளை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.


சென்னை போலீஸ் அளித்த ரகசிய தகவல்:


கடந்த 2014ஆம் ஆண்டு இந்த தம்பதியினர் டெல்லிக்கு சட்டவிரோதமாக வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், 2018ஆம் ஆண்டு பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். உள்ளூர் ஏஜென்ட் உதவியுடன் போலி பெயர்களில் இவர்கள் அடையாள அட்டைகளை பெற்றதாக கூறப்படுகிறது. 2018 முதல் ஜிகானியில் வசித்து வந்துள்ளனர்.


பெங்களூரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தன்னுடைய தலைவரின் மத போதனைகளை விளம்பரப்படுத்த வங்கதேசத்தில் இருந்து வந்ததாக கைதான ரஷித் அலி சித்திக், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. 


போலி அடையாள அட்டைகளுடன் வசித்து வந்த பாகிஸ்தானியர்கள்:


இவர், ஷங்கர் சர்மா என்ற பெயரில் வசித்து வந்துள்ளார். இருப்பினும், அவர் ஸ்லீப்பர் செல் பகுதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ரஷீத்தின் மனைவி ஆயிஷா, 38, ஆஷா சர்மா என்ற போலி பெயரைப் பயன்படுத்தி வந்தார். இவரது பெற்றோர் ஹனிஃப் முகமது, 73, ராம் பாபா சர்மா என்ற பெயரில் வசித்து வந்தார். 


இதுகுறித்து காவல்துறை தரப்பு பேசுகையில், "குற்றம் சாட்டப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள லியாகதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. வங்கதேசத்தில் தங்கியிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா என்பவரை கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அது ஆன்லைன் திருமணம்.


பாகிஸ்தானில் உள்ள அவரது உறவினர்கள் துன்புறுத்தியதால் அங்கிருந்து தப்பிச் சென்று மதத் தலைவர் யூனுஸ் கோஹரின் போதனைகளை ஊக்குவிக்கத் தொடங்கினார். இவரது செலவுகள் மற்றும் ஊதியத்தை மெஹ்தி அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. அதன் உறுப்பினர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்" என தெரிவித்துள்ளது.