டெல்லி முதலமைச்சர் அதிஷி, அரசின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.


எக்ஸ் தளத்தில் இதுபற்றி டெல்லி முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட பதிவில், "நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் இல்லம் காலி செய்யப்பட்டுள்ளது. பாஜகவின் உத்தரவின் பேரில், முதல்வர் அதிஷியின் உடைமைகளை முதல்வர் இல்லத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றியுள்ளார் துணை நிலை ஆளுநர்" என குறிப்பிட்டுள்ளது.


அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிஷி?


இந்த குற்றச்சாட்டுகளுக்கு துணை நிலை ஆளுநர் இன்னும் பதில் அளிக்கவில்லை. முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து அட்டைப்பெட்டிகள் மற்றும் சாமான்கள் வெளியே எடுத்துச் செல்லப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அதோடு, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் சாவியை ஒப்படைப்பது தொடர்பாக பொதுப்பணித்துறையிடம் (PWD) முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.


டெல்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள அரசு இல்லத்திற்கு கடந்த திங்களன்று அதிஷி குடிபெயர்ந்தார். அவருக்கு முன்பு முதலமைச்சராக பதவி வகித்த அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு, சமீபத்தில்தான் அங்கிருந்து வெளியேறினார்.


நடந்தது என்ன?


இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளது பாஜக. டெல்லி எதிர்க்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா, இதுகுறித்து கூறுகையில், "புதிய முதலமைச்சருக்கு ஒதுக்குவதற்காக பங்களா இன்னும் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை. கெஜ்ரிவால் அரசு இல்லத்தை இன்னும் காலி செய்யவில்லை. அவரது பெரும்பாலான உடைமைகள் இன்னும் அங்கேயே உள்ளன.


 






மதுரா சாலையில் உள்ள ஏபி-17 அரசு பங்களா அதிஷிக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதால், முதலமைச்சர் அதிகாரப்பூர்வ இல்லத்தை அவர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும் பாஜக குற்றம் சாட்டியது. கடந்த ஆண்டு, அரவிந்த் கெஜ்ரிவால் அரசில் அமைச்சராக பதவியேற்ற பிறகு அதிஷிக்கு ஏபி-17 குடியிருப்பு ஒதுக்கப்பட்டது.