இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான மோதல் தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. இந்தியா உடனான அறிவிக்கப்படாத போர் முடிவுக்கு வந்த பிறகும் கூட, பாகிஸ்தானின் தலைவலி தீர்ந்தபாடில்லை. அந்நாட்டின் மேற்கு எல்லை பகுதியில் பலுசிஸ்தான் விடுதலை குழு இயக்கங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. பலுசிஸ்தானில் பல பகுதிகளை 3 இயக்கங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கு பின்னணியில், இந்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.

விஸ்வரூபம் எடுக்கும் பலுசிஸ்தான் பிரச்னை:

இந்தியா உடனான தன்னுடை கிழக்கு எல்லைப்பகுதியில் அப்பாவி மக்கள் மீதும், இந்திய ராணுவம் மீதும் இரண்டு நாள்களாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வந்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிப்பதற்காக ஆபரேஷன் சிந்தூரை திட்டமிட்டு, கச்சிதமாக நடத்தி முடித்தது இந்தியா. இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற பாகிஸ்தான், இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தியா அந்த முயற்சிகளை முறியடித்தது. 

பாகிஸ்தானின் கிழக்கு எல்லை பகுதியில் இந்தியாவுடன் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியது. இருப்பினும், தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தாக்குதலை நிறுத்தி கொள்வதாக இருநாடுகளும் அறிவித்துள்ளது. இந்தியா உடனான மோதல் முடிவுக்கு வந்த பிறகும் கூட மற்றொரு தலைவலி, அந்த நாட்டுக்கு பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. 

2ஆக உடைகிறதா பாகிஸ்தான்?

பாகிஸ்தானின் மேற்கு எல்லை பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தானில் தாக்குதலை தீவிரப்படுத்தி, பாகிஸ்தானுக்கு குடைச்சல் அளித்து வருகிறது பலுசிஸ்தான் விடுதலை குழு இயக்கங்கள். பாகிஸ்தான் ராணுவமும் பலுசிஸ்தான் விடுதலை குழு இயக்கங்களும் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வரும் நிலையில், பலுசிஸ்தானுக்கு விடுதலை அளிக்க வேண்டும் என்ற குரல்கள் கடந்த சில நாள்களாக வலுப்பெற தொடங்கியுள்ளது.

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பல பகுதிகளை 3 இயக்கங்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாகவும் அங்கு பாகிஸ்தான் கொடியை இறக்கிவிட்டு, பலுசிஸ்தான் கொடியை ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் மீதும் முக்கிய தளவாடங்கள் மீதும் பலுசிஸ்தான் விடுதலை குழுக்கள் ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கடந்த வாரம், இந்த தாக்குதல் வேகம் பெற தொடங்கியுள்ளது.

இந்தியாவோடு மோதினால் அதோ கதிதான்:

ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி அளிக்க பாகிஸ்தான் அரசு, தன்னுடைய ஒட்டுமொத்த கவனத்தையும் கிழக்கு எல்லையில் குவித்த நிலையில், மேற்கு எல்லையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விடுதலை குழு இயக்கங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம், கெச், மஸ்துங் மற்றும் கச்சி ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தையும் அதன் கூட்டுப்படைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது பலூச் விடுதலை ராணுவம் (Baloch Liberation Army). இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாஸி கூறுகையில், "பாகிஸ்தானின் மத்திய அரசாங்கமும் ராணுவமும் பலுசிஸ்தான் மாகாணத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்கின்றன. பலுசிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் இல்லாமல் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் நடமாட முடியவில்லை" என்றார்.

இதற்கு பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கூறப்படுகிறது. பலுசிஸ்தான் மாகாணம் போன்ற சில பகுதிகளில் பயங்கரவாதப் படைகளுக்கு இந்தியா நிதி, ஆயுதங்கள் மற்றும் பயிற்சி அளித்து ஆதரவளிப்பதாக சீனாவின் செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் (Global Times) செய்தி வெளியிட்டுள்ளது. இக்கட்டான நேரத்தில், பாகிஸ்தானை பலவீனப்படுத்துவதற்காக இந்திய அரசு இப்படி செய்து வருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.