ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்து வந்த அறிவிக்கப்படாத போர் முடிவுக்கு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போர்: 

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து 2ஆவது நாளாக தாக்குதல் நடத்தியது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைப்பகுதிகளில் ட்ரோன்களை அனுப்பி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்தியா அந்த முயற்சிகளை முறியடித்தது.

இரு நாடுகளுக்கு இடையே நடந்து வந்த அறிவிக்கப்படாத போரை அமெரிக்கா முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், "அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அடிப்படை அறிவை பயன்படுத்தி புத்திசாலித்தனமாக செயல்பட்டதற்கு இரு நாடுகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்த பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தர், "பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய ராணுவ நடவடிக்கைகளுக்கான தளபதியை போனில் அழைத்து பேசினார்.

மே 12 ஆம் தேதி மீண்டும் மீட்டிங்:

நிலம், வானம் மற்றும் கடல் ஆகிய மூன்றிலும் அனைத்து விதமான துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக இரு தரப்பினரும் இந்திய நேரப்படி 5 மணிக்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்று, இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் மே 12 ஆம் தேதி 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்" என்றார்.

எக்ஸ் தளத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில், "துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து உறுதியான, சமரசமற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறே செய்யும்" என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 நாள்களாக, இந்திய - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதற்கு பழிவாங்குவதற்காக இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இருப்பினும், அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் இந்தியா தாக்கி அழித்தது.