பாகிஸ்தான் அணியின் இளம் மற்றும் நம்பிக்கை நட்சத்திர பந்துவீச்சாளராக வலம் வருபவர் ஷாகின் ஷா அப்ரிடி. கடந்தாண்டு நடைபெற்ற உலககோப்பை டி20 போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர்.


இந்த நிலையில், தனியார் விளையாட்டு இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலியை ஹாட்ரிக் செய்ய வேண்டும் என்பதே எனது கனவு” என்று கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சற்றே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணி தனது பலத்தை கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலககோப்பையில் நிரூபித்தது.





அந்த அணி கோப்பையை வெல்லாவிட்டாலும் அவர்கள் ஆடிய விதத்தை அனைவரும் பாராட்டினர். குறிப்பாக, உலககோப்பை வரலாற்றில் இந்தியாவை வென்றதே கிடையாது என்ற வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி புதிய சகாப்தம் படைத்தது. அந்த போட்டியில் 151 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 18வது ஓவரிலே எட்டி பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன் ரோகித்சர்மா ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் டக் அவுட்டாகினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கே.எல்.ராகுல் 3 ரன்களில் ஷாகின் ஷா அப்ரிடி பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரையும் அவர் ஆட்டமிழக்கச் செய்த விதம் இந்திய வீரர்களையும், இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணிக்காக தனி ஆளாக போராடிய விராட்கோலியையும் 19வது ஓவரில் கோலி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷாகின்ஷா அவுட்டாக்கினார்.





இந்த போட்டியில் ஷாகின்ஷா அப்ரிடி 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாகின்ஷா அப்ரிடி 21 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 86 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 28 ஒருநாள் போட்டிகளில் ஆடி 53 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 39 டி20 போட்டிகளில் ஆடி 45 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஷாகின் ஷா அப்ரிடி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆல் ரவுண்டர் ஷாகித் அப்ரிடியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண