காதல் மதம், மொழி, நிறம் என எந்த பாகுபாடும் இன்றி வருவது. அந்த வகையில், காதலுக்கு எல்லை என்பதும் இல்லை என்றே கூற வேண்டும். சமூக வலைதள வளர்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வழியில் நண்பர்களாகி காதலர்களாக வாழ்க்கையில் இணைந்தவர்கள் ஏராளம்.


வீடியோ கால் மூலம் திருமணம்:


இந்தியாவும், பாகிஸ்தானும் அரசு மற்றும் அரசியல் காரணங்களால் கருத்து வேறுபாடுகளுடன் காணப்பட்டாலும் காதலுக்கு அது தடையில்லை என்பதை நிரூபித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த பெண் மேவிஷ். ராஜஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ரஹ்மான். ரஹ்மான் பிகனூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் குவைத்தில் பணியாற்றி வருகிறார்.


25 வயதான மேவிஷிற்கும், ரஹ்மானுக்கும் இடையே சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி காதலை கூறியுள்ளனர். அப்போது, குவைத்தில் ரஹ்மான் இருந்துள்ளார். மேவிஷ் பாகிஸ்தானில் இருந்துள்ளார். இதையடுத்து, காதலைச் சொன்ன 3 நாட்களிலே வீடியோ கால் மூலமாக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.


இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான் காதல் மனைவி:


பின்னர், கடந்தாண்டு மெக்காவிற்கு மேவிஷ் புனித யாத்திரை சென்றபோது ரஹ்மானை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து, கடந்த 25ம் தேதி பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு வந்த மேவிஷ், அங்கிருந்து வாகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் வந்தார். 45 நாள் சுற்றுலா விசா மூலமாக இந்தியா வந்த மேவிஷை ரஹ்மானின் குடும்பத்தினர் நேரில் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் ராஜஸ்தானில் சுருவில் உள்ள அவர்களது சொந்த கிராமமான பிதிசாருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காதல் கணவனுக்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு வந்த மேவிஷ் ராஜஸ்தானில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.


25 வயதான மேவிஷிற்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2018ம் ஆண்டு இருவரும் மேவிஷை தனது கணவரை பிரிந்துவிட்டார். சமீபகாலமாக இந்தியா – பாகிஸ்தான் காதல் ஜோடிகளின் திருமணம் அதிகளவில் நடந்து வருகிறது.


சமீபத்தில் சீமா ஹைதர் என்ற பெண் பாகிஸ்தானில் இருந்து எல்லை கடந்து வந்து தனது இந்திய காதலரைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 21 வயதான முலாயம் சிங் யாதவ் என்பவர் தனது 19 வயதான பாகிஸ்தானி மனைவி இக்ரா ஜூவானிக்கு போலி ஆவணம் மூலமாக இந்தியாவிற்கு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.