ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டம் சோபோர் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஷேர் காலனி சோபோரில் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும்  வியாபாரி ஒருவர் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக்கொண்டிருந்தபோது மர்மமான பொருள் வெடித்ததாக கூறப்படுகிறது.


பயங்கரவாதிகள் சதி காரணமா? சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதும் அதற்கு ராணுவம் பதிலடி கொடுப்பதும் அதிகரித்து வந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்த சம்பவம் நடந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.


சமீபத்தில், குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


கடந்த 15ஆம் தேதி இரவு, ஜம்மு தோடா பகுதியில் நடந்த என்கவுண்டர் சம்பவத்தில் ராணுவ கேப்டன், காஷ்மீர் காவல்துறை அதிகாரி உள்பட பாதுகாப்பு படையை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, கடந்த 8ஆம் தேதி, கத்துவா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது ஆயுதம் ஏந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 


ஜம்மு காஷ்மீரில் தொடர் பதற்றம்: சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களும் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. 


ஜம்மு காஷ்மீருக்கு சட்டப்பேரவை இருந்துபோதிலும், அதற்கு இன்னும் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால், பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.