உத்தரப் பிரதேசத்தில் வகுப்பறைக்குள் ஓர் ஆசிரியை உறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மாணவிகள் சிலர் விசிறிவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.


அரசுப் பள்ளிகள் ஒரு காலத்தில் அனைவருக்குமான கற்பிக்கும் இடமாக இருந்த ஒரு காலகட்டத்தில் இருந்தது, தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்ததாகக் கருத்து எழுந்தது. எனினும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தனித்துவம் மிக்க, தன்னிகரற்ற ஆசிரியர்கள் பலர் அரசுப் பள்ளிகளைச் சிறப்பானதாக மாற்றி வருகின்றனர். எனினும் வட மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் அவல நிலையே தொடர்கிறது.


உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் கோகுல்பூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு டிம்பிள் பன்சால் என்னும் ஆசிரியை பணியாற்றி வருகிறார்.


தூங்கும் ஆசிரியைக்கு விசிறி விட்ட மாணவிகள்


அவர் வகுப்பறையில் பாடம் நடத்தாமல் தூங்கிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆசிரியை டிம்பிள் தரையில் உறங்கிக் கொண்டிருக்க, சிறுமி ஒருவர் அருகில் நின்றுகொண்டு விசிறியால் கை கொண்டு விசிறிக் கொண்டிருக்கிறார். தலைமாட்டில் அமர்ந்து இன்னொரு சிறுமி விசிறிக் கொண்டிருக்கிறார். அருகில் யாரோ ஒருவர் நாற்காலியில் கால் நீட்டி அமர்ந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்த வீடியோவை எடுத்தது யார் என்னும் தகவல் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.




மாணவிகளை அடிக்கும் வீடியோ 


இந்த நிலையில் அலிகர் தொடக்கக் கல்வி அலுவலகம், வீடியோ தொடர்பாக விசாரித்து வருகிறது. மற்றொரு வீடியோவில் குழந்தைகளை ஓர் ஆசிரியை அடிக்கும் காட்சிகள் வெளியாகின. அதுவும் டிம்பிள்தான் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த நிலையில், ஆசிரியை டிம்பிள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வீடியோ குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.