Pahalgam Terror Attack: பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவராக சந்தேதிக்கப்படும், ஹசீம் மூசா, பாகிஸ்தான் முன்னாள் பாரா கமாண்டோ வீரர் என கூறப்படுகிறது.

Continues below advertisement

சிக்கிய தீவிரவாதியின் அடையாளம்?

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவராக ஹசிம் மூசா என்பவர் அடையாளம் காணப்பட்டார். இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், “அவர் பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பிரிவான பாரா கமாண்டோவைச் சேர்ந்தவர்” என தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானை மையமாக கொண்ட தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தற்போது தீவிரவாதியாக செயல்பட்டு வரும் மூசா, உள்ளூர் மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் அல்லாதோர் மீது தாக்குதல் நடத்தும் குறிப்பிட்ட நோக்கில் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டதாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்வு செய்த அனுப்பிய பாகிஸ்தான் ராணுவம்?

சிறப்பு சேவை குழு (SSG) எனப்படும் பாகிஸ்தானின் சிறப்பு ராணுவக் குழு மூலமாக மூசா, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பிற்கு அனுப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எஸ்எஸ்ஜியைச் சேர்ந்த பாரா கமாண்டோக்கள் இயல்புக்கு மாறான போர் தந்திரங்களில் சிறப்பு பயிற்சி பெறுவதோடு, ரகசிய தாக்குதலில் நிபுணத்துவம் பெற்றவர்களாவார்.  தீவிரமான மற்றும் கடுமையான பயிற்சி முறையானது மூலோபாய சிந்தனையைத் தவிர, உடல் நிலை மற்றும் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது. எஸ்.எஸ்.ஜி கமாண்டோக்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் கை சண்டையை கையாள்வதில் திறமையானவர்கள் மற்றும் இக்கட்டான சூழலிலும் உயிர்வாழும் திறன்களைக் கொண்டிருப்பார்கள். காஷ்மீரைச் சேர்ந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 பேரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, மூசா தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement

மற்ற தாக்குதலில் தொடர்பு?

கடந்த ஆண்டு அக்டோபரில் 6 பேர் கொல்லப்பட்ட ககஞ்சிர் மற்றும் கந்தர்பல்லில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் மூசாவிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை கிடைத்த தகவல்கள்பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஹசிம் மூசா மற்றும் அலி பாய் மற்றும் அதே அளவு உள்ளூர்வாசிகளான அடில் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோரின் பங்களிப்பு உறுதிப்படுத்தியிருந்தாலும், சந்தேகிக்கப்படும் நபர்களிடம் மேற்கொண்டுள்ள விசாரணை மேலும் பல பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது. அதோடு, பைசரன் காட்டுப்பகுதியில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டை மிகத்தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தாக்குதலில் சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் கூறினாலும், தற்போது அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தான் தாக்குதலில் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக பாகிஸ்தானின் மறுப்பை ஏற்க மறுத்த இந்தியா, இந்தூஸ் நீர் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட, பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.