ஏடிஎம்-களில் பணம் எடுப்போரின் ஒரு முக்கிய பிரச்னையாக இருப்பது, அங்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருப்பது தான். இந்த பிரச்னையை உடனடியாக தீர்க்க, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இல்லாமல் மக்கள் தவிப்பு

தற்போதெல்லாம், ஏடிஎம் சென்று பணம் எடுப்போருக்கு பெரிய பிரச்னையாக இருப்பது, அங்கு 500 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருப்பதுதான். ஆம், முன்பெல்லாம், ஏடிஎம்-களில் 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுக்களும் வைக்கப்பட்டிருந்தன. அதனால், மக்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவில் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இப்போதெல்லாம், குறைந்தபட்சம் 500 ரூபாய் மற்றும் அதன் பெருக்கல்களில்தான் பணத்தை எடுக்க முடியும்.

இதனால், 500 ரூபாய்க்கும் குறைவாக பணம் எடுக்க விரும்புவோருக்கு, கடும் சிரமங்கள் ஏற்படுகின்றன. சிலர், தங்கள் வங்கிக் கணக்குகளில் குறைவான பணமே வைத்திருப்பார்கள். அதில், 200, 300 ரூபாய் எடுக்க விரும்பினால், அது சாத்தியமில்லாமல் போகிறது. மக்களின் இந்த முக்கிய பிரச்னையை போக்கும் விதமாகத்தான், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

Continues below advertisement

ரிசர்வ் வங்கியின் உத்தரவு என்ன.?

ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் எடுக்க முடியாமல் தவிக்கும் மக்களின் குறையை போக்குவதற்காக, ஏடிஎம்-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை, வழக்கமான அடிப்படையில் உறுதி செய்யுமாறும், அதை படிப்படியாக அமல்படுத்தவும், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதுவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்குள், 75 சதவீத ஏடிஎம்-களில் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள், அனைத்து ஏடிஎம்-களிலும் 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம், குறைந்த அளவில் பணம் எடுக்க முடியாமல் தவித்து வருவோர் பயனடைவர். மக்களின் சிரமத்தை உணர்ந்து, ரிசர்வ் வங்கி இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது, மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அக்கவுண்ட்டில் குறைந்த பேலன்ஸ் வைத்துக்கொண்டு, 100 முதல் 400 ரூபாய் வரை எடுக்க முடியாமல் தவித்து வருவோருக்கு இது ஒரு நல்ல செய்தி.