பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "இந்த விவகாரத்தில் மத்திய அரசு எந்த வித நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு முழு ஆதரவு அளிக்கிறேன்" என கூறியுள்ளார். இந்த கூட்டத்தில், காங்கிரஸை தவிர திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் நடந்தது என்ன?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகக் கூறி, பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, "பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அனைவரும் கண்டித்தனர். எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி முழு ஆதரவை வழங்கியுள்ளது" என்றார்.

அரசுக்கு தோளோடு தோள் கொடுத்த எதிர்க்கட்சிகள்:

கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்தோபாத்யாய், செய்தியாளர்களிடம் பேசுகையில், "பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாட்டின் நலனுக்காக எந்த முடிவுகளை எடுத்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளும் அரசாங்கத்திற்கு துணை நிற்கும் என்று நாங்கள் அரசாங்கத்திற்கு உறுதியளித்தோம்" என்றார்.

பின்னர் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா கடந்த காலங்களில் வலுவான நடவடிக்கை எடுத்துள்ளது.

தொடர்ந்தும் அதைச் செய்யும். இது குறித்து அரசாங்கத்தின் சார்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சம்பவம் எப்படி நடந்தது, எங்கு தவறு நடந்தது என்பது குறித்து ஐபி, உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்களை வழங்கினர்.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் அரசாங்கத்துடன் இருப்பதாக அனைத்துக் கட்சிகளும் தெரிவித்தன. அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தச் செய்தியை வழங்கியுள்ளன. மேலும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அரசாங்கம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை ஆதரிப்போம் என்று ஒரே குரலில் கூறியுள்ளனர். கூட்டம் நேர்மறையான குறிப்பில் முடிந்தது" என்றார்.