பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஆர்வலர், காந்தியவாதி மற்றும் சுயதொழில் பெண்கள் சங்கத்தின் (SEWA) நிறுவனரான எலாபென் பட், உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.


நாட்டில் பொருளாதார ரீதியில் பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்காக போராடிய பெண்ணுரிமை சமூக போராளி எலா பட். 


பெண்களின் பொருளாதார நலன்களுக்காக இந்தியாவின் முதல் மகளிர் வங்கியான சேவா என்ற கூட்டுறவு வங்கியை 1973-ம் ஆண்டு தொடங்கினார். மகளிர் உலக வங்கியின் துணை நிறுவனராகவும் அவர் செயல்பட்டார். அவருக்கு 1985-ம் ஆண்டில் நாட்டின் உயரிய பத்மஸ்ரீ விருதும், 1986-ம் ஆண்டில் நாட்டின் 3-வது உயரிய பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டன. 


தொழில் முனைவோராக பெண்களுக்கு அதிகாரம் கிடைக்க செய்வதற்கான அவரது முயற்சிக்காக 2011-ம் ஆண்டு காந்தி அமைதி விருதும், சமூக தலைமைத்துவத்திற்காக 1977-ம் ஆண்டில் மகசேசே விருதும் அவர் பெற்றுள்ளார். 


தி எல்டர்ஸ் என்ற சர்வதேச என்ஜிஓ அமைப்பிலும் பணியாற்றி உள்ளார். இதில் இருந்தபடி, பாலின சமத்துவம், குழந்தை திருமணம் உள்ளிட்ட சமூக தீங்குகளை களைதல் போன்ற விஷயங்களுக்காக பணியாற்றினார். வழக்கறிஞராகவும் இருந்துள்ளார். 






பெண்களை நிதி சார்ந்து கல்வியறிவு பெற்றவர்களாகவும் மற்றும் அதிகாரம் படைத்தவர்களாகவும் உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.


சமூக ஆர்வலரான பட், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். 1989 வரை அப்பொறுப்பை வகித்தார். அவர் உலக வங்கி போன்ற அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்தார். 2007 இல் அவர் மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக நெல்சன் மண்டேலாவால் நிறுவப்பட்ட உலகத் தலைவர்களின் குழுவான எல்டர்ஸில் சேர்ந்தார்.






குடியரசுத் தலைவர் இரங்கல்


பட்டின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:






எலாபென் பட்டின் மரணம் குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். காந்தியவாதி, அவர் எண்ணற்ற பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வென்றெடுக்க உதவினார். அவற்றை ஒழுங்கமைப்பதில் அவரது வெற்றிகரமான சோதனைகள் உலகம் முழுவதற்கும் சிறந்த பாடங்களைக் கொண்டுள்ளன. அவரது அமைதியான ஆனால் பிடிவாதமான செயல்பாட்டை இழப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.