ஆதரவற்றோரின் அன்புத்தாய் என்றழைக்கப்படும் சிந்துதாய் சப்கல் மறைந்தார்.


73-வது வயதில் உலகை விட்டுப் பிரிந்த அவர் தனது சேவைக்காக பத்ம ஸ்ரீ விருது பெற்றார். இது மட்டுமல்ல மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் என 750-க்கும் மேற்பட்ட விருதுகளை அவர் வாங்கிக் குவித்தார். 


இளமையில் வறுமை:


இளமையில் வறுமை கொடிதினும் கொடிது என்பார்கள். அப்படி தனது குழந்தைப் பிராயயம் முதலே வறுமையில் உழன்ற சிந்துதாய் சப்கல் பெரியவர் ஆனதும், தன்னைப் போல வறுமையிலும், யாரும் இல்லாமலும் வளரும் குழந்தைகளின் நலனுக்காக பாடுபட முடிவு செய்தார். இதற்காக அவர் குழந்தைகள் காப்பகத்தை ஆரம்பித்தார். இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அவர் தாயாக வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர் தனது வாழ்நாள் காலத்தில் 1050 ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்துள்ளார். 


குழந்தைத் திருமணத்தை சந்தித்தவர்:


மகாராஷ்டிராவில் பிறந்த சிந்துதாய் சப்கலு கு 12 வயதாக இருந்தபோதே அவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. 32 வயது நபருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். மூன்று குழந்தைகளுக்கு அவர் தாயான நிலையில் கணவரும் இறந்துபோனர். கையில் இரண்டு குழந்தைகள், வயிற்றில் ஒரு சிசு என்று நிர்க்கதியாக நின்ற சிந்துத்தாய்க்கு இனி எப்படி இந்தப் பிள்ளைகளை வளர்க்கப் போகிறோம் என்பதைவிட, இனி இதுபோன்ற பிள்ளைகள் தவிக்கக் கூடாது என்பதே எண்ணமாக இருந்தது.


ஆதரவற்ற நிலையில் 3 குழந்தைகளுடன் இருந்த சிந்துதாய் சப்கல் பிச்சை எடுத்தே பிள்ளைகளை வளர்த்தார். ஆனால் மன உறுதியுடன் தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தினார்.


பின்னர் அவருக்கு ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிக்க சில நல் உள்ளம் கொண்டோரின் உதவி கிடைத்தது. இவ்வாறாக தனது சேவையை அவர் விஸ்தரித்தார்.  சன்மதி பால் நிகேதன் சன்ஸதா என்ற (Sanmati Bal Niketan Sanstha) ஆதரவற்றோர் இல்லத்தை புனேவில் நிறுவினார். அதன்மூலம் ஒன்றல்ல இரண்டல்ல 1050 ஆதரவற்றக் குழந்தைகளை அவர் தம் வாழ்நாளில் வளர்த்துள்ளார்.







இவரது வாழ்க்கையைப் பற்றி 2010ல் மி சிந்துதாய் சப்கல் போல்தே 'Mi Sindhutai Sapkal Boltey' என்ற பயோபிக் வெளியானது.


வறுமை, குழந்தைத் திருமணம், புறக்கணிப்பு எனப் பல்வேறு சமூகப் பிரச்சினைகளையும் எதிர்கொண்ட அவர் சமூகப் போராளியாக உருவெடுக்கக் காரணமாக இருந்தது.


கடந்த சில நாட்களாகவே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.  சிந்துதாய் சப்கல் புனேவில் உள்ள காலக்ஸி கேர் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கடந்த ஆண்டுதான் இவருக்கு பத்மஸ்ரீ விருது அளித்து மத்திய அரசு கவுரவித்திருந்தது.