நீட் முதுகலை மருத்துவப் படிப்புகளில், பொதுப்பிரிவில் இடம்பெற்றுள்ளோரில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது. 


முன்னதாக, ஓய்வுபெற்ற நிதி செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவு பயனாளிகளை அடையாளம் காண குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. 


வழக்கு:  


நீட் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதமும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 


இந்த வழக்கின் விசாரணையின் போது, முற்பட்ட வபுப்பினருக்கான ஆண்டு வருமான அளவை நீதிபதிகள் கேள்விக்கு உட்படுத்தினார்.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை, சமூகத்தில் முன்னேறிய நபர்கள்/பிரிவினர் (கிரீமி லேயர்) பெறுவதைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ரூ.8 லட்சம் ஆண்டு வருமான அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  முற்பட்ட  வகுப்பினர், சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கியுள்ளனர் என்று வாதம் ஏற்புடையதாக இருக்காது.  அப்படி இருக்கையில், இவர்களுக்கும் ஆண்டு வருமான உச்ச  வரம்பு (கிரீமி லேயர்) எப்படி பொருந்தும்? ஆண்டு வருமான ரூ. 8 லட்சம் என்பது எப்படி பொருந்தும்? என்று நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பினார்.   


 



உச்சநீதிமன்றம்


இதற்குப் பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், முற்பட்ட வகுப்பினருக்கான ஆண்டு வருமான அளவை மறு பரிசீலனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆணையத்தை அமைத்து நான்கு வாரங்களுக்குள் தீர்வுகள் எட்டப்படும்" என்று தெரிவித்தார். 


இதனையடுத்து, வழக்கு மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டியலிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை அடுத்து பொங்கல் விடுமுறை வருவதால், பொங்கலுக்குப் பிறகே எம்பிபிஎஸ் அகில இந்திய ம‌ருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என்றும் கூறப்பட்டது.


அஜய் பூஷன் பாண்டே தலைமையில் குழு:    


இதனையடுத்து, கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ஓய்வுபெற்ற நிதி செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே தலைமையில் மத்திய அரசு பரிந்துரைக் குழு ஒன்றை அமைத்தது. 


உச்ச நீதிமன்றத்தின்  21.10. 2021 நாளிட்ட உத்தரவின் படி,  பொருளாதார பின்தங்கிய பிரிவினருக்கான தகுதிகளை நிர்ணயம் செய்யும் 17-01-2019 நாளிட்ட அரசின் உத்தரவை ஆய்வு செய்யவும்; பொருளாதார பின்தங்கிய பிரிவினரை அடையாளம் காண நாட்டில் இதுவரை பின்பற்றப்பட்ட பல்வேறு அணுகுமுறைகளை ஆய்வு செய்யவும்; 




 


வரும் காலங்களில், பொருளாதார பின்தங்கிய பிரிவினரை அடையாளம் காண ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்களை பரிந்துரை செய்யவும்;


இந்த குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குழுவின் பரிந்துரை: 


1. பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவில், குடும்ப உறுப்பினர்கள் ஈட்டுகின்ற அனைத்து விதமான வருமானமும் (வருமானம், வணிகம், விவசாயம், தொழில்கள் மூலம் பெறும் வருமானம், இதர வருமானம்) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால், ஓபிசி விண்ணப்பதாரர்களை(கிரீமி லேயர்) தீர்மானிப்பதற்கு மாத ஊதியம், விவசாயம் ஆகியவை எடுத்துக் கொள்வதில்லை. 


மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான குடும்ப வருமானம், மனுதாரரால் விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டின் வருமானமாக இருக்க வேண்டும்.  ஆனால், ஓபிசி கிரீமி லேயரில், மனுதாரரின் குடும்ப வருமானம்  விண்ணப்பிக்கப்பட்ட ஆண்டிற்கு முந்தைய மூன்று நிதி ஆண்டின் வருமானமாக இருக்க வேண்டும்.  மேம்பட்ட நிலையில் உள்ள ஓபிசி விண்ணப்பதாரர்களை(கிரீமி லேயர்)  தீர்மானிப்பதற்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களை தீர்மானிப்பதற்கான  நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனை முற்றிலும் வேறானது. 


எனவே, ரூ.8 லட்சத்திற்கு குறைவாக ஆண்டு வருமானம் கொண்டவர்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களை பெற தகுதியுடைவர்கள். மேலும், குடும்பம் என்பதற்கான வரையறை 17-01-2019 நாளிட்ட அரசின் உத்தரவின் படியே தொடரலாம்.  


17-01-2019 நாளிட்ட அரசு உத்தரவில், குடும்பம் என்பது விண்ணப்பதாரரின் பெற்றோர், 18 வயதுக்குட்பட்ட சகோதார/ சகோதரிகள், மனைவி/கணவர், மற்றும் 18 வயதுக்குட்பட்ட மகன். மகள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்;  


2. ஆண்டு குடும்ப வருமானம் எதுவாக இருந்தாலும், ஐந்து ஏக்கர் அல்லது அதற்கு மேற்பட்ட விவசாய நிலத்தை உடையவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினராக கருத இயலாது; 


3.  17-01-2019 நாளிட்ட அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள  சொந்தமனை, வீட்டுமனை உள்ளிட்ட நிர்பந்தங்கள் முற்றிலும் அகற்றப்பட  வேண்டும்; 


ஆகிய பரிந்துரைகளை குழு அளித்தது.     


மருத்துவர்கள் போராட்டம்: 


இந்நிலையில், முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கையை விரைவில் நடத்திடக்கோரி டெல்லியில் மருத்துவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இதனையடுத்து, பொருளாதாரத்தில் நலிவடைந்தப் பிரிவு பயனாளிகளை அடையாளம் காண குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என நிர்ணயிக்கும் குழவின் பரிந்துரையை அரசு ஏற்றுக் கொண்டதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்தது. மேலும், வழக்கின் தீவிரத்தன்மையை கருதி, உடனடியாக வழக்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனையடுத்து, இன்று இந்த வழக்கு விசாரிக்கப்பட இருக்கிறது.