இந்திய மிக உயரிய விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள் ஆகும். பத்மவிபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ என்று மூன்று பெயர்களில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்ட கல்வி, சமூக சேவை, பொதுநிர்வாகம், அறிவியல் தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு போன்ற பல துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நடப்பாண்டில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்மவிருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் பத்மபூஷண் விருதை வழங்கி கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண்ஜெட்லி, மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மறைந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ், மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கும் பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 119 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 7 பத்ம விபூஷன் விருதுகளும், 10 பத்ம பூஷண் விருதுகளும், 102 பத்மஸ்ரீ விருதுகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகளில் 29 விருதுகள் பெண்களுக்கும், 16 விருதகள் உயிரிழந்தவர்களுக்கும், 1 விருது திருநங்கை ஒருவருக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ம விருதுகள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளுடன் அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டி கவுரவித்தார். பத்மபூஷண் விருது பெற்ற பி.வி.சிந்துவிற்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்