நேற்று இரவு 9.20 மணி அளவில் நடந்த சிறப்பு அமர்வில், நீதிபதி விபின் சங்கி மற்றும் ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு, உலகமே அச்சத்தில் உறைந்திருக்கும் இந்த இக்கட்டான சூழலில் நெருக்கடியை சமாளிக்கவும், பேரழிவைத் தவிர்க்கவும் கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளையும் ஆராய்ந்து செயல்படுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தினார்.




மேலும் அந்த அமர்வில், மத்திய அரசு பிற மாற்று வழிகளை ஆராயவில்லை என்று நினைப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தேவையை, நீங்கள்தான் கொள்முதல் செய்து வழங்கவேண்டும், அது உங்கள் கடமை என்று அவர் கூறினார். கொரோனா வழக்குகள் விரைவாக அதிகரித்துவரும் இந்த நிலையில் ஆக்ஸிஜனுக்கான முரண்பட்ட கோரிக்கைகள் இருப்பதாகவும், மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் அடிப்படையில் ஆக்சிஜன் தேவையை மேப்பிங் செய்துள்ளோம் என்றும் அந்த அமர்வில் கூறப்பட்டது. அமர்வின் முடிவில் டெல்லிக்கு தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது என்றும், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மருத்துவமனைகள் மற்றும் ஆக்சிஜன் கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 




தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தினசரி 11 ஆயிரம் என்ற அச்சமளிக்கும் அளவை நெருங்கிவருகிறது. தமிழகத்திலும் அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பிரிவு என்ற தனிவார்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் கொரோனா வார்டு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி என்ற பெண், செல்வராஜ், சிராஜ் உள்பட 4 பேர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்தனர். ஒரேநாளில் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 நபர்கள் அடுத்தடுத்த உயிரிழந்ததற்கு, மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதே காரணம் என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டினார். மேலும், அவர்கள் 4 பேரும் உயிரிழந்த பிறகே மருத்துவமனையில் அவசரம் அவசரமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.




நாளுக்கும் நாள் அதிகரிக்கும் கொரோனாவால் மக்கள் ஒருபக்கம் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில் பல இடங்களில் மருத்துவமனைகளில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுவருவது மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்து வருகிறது. கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு மற்றும் சில இடங்களில் முழு ஊரடங்கு அறிவித்து வந்தாலும், மக்கள் விழிப்புடன் செயல்பட்டால் மட்டுமே கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீண்டு வரமுடியும்.