இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 10 நாட்களாக மிகவும் அதிகரித்து வருகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா,- சத்தீஸ்கர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ராஞ்சியிலுள்ள பல்ஸ் சூப்பர் ஸ்பாஷலிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை தோனியின் ரசிகர்கள் பக்கம் ஒன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் தோனியின் பெற்றோர் விரைவில் கொரோனாவிலிருந்து குணமடைய வேண்டும் என்று பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் பதிவிற்கு பலரும் பிரார்த்தனை பதிவை இட்டு வருகின்றனர். அவர்களும் தோனியின் பெற்றோர் விரைவில் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு பூரண குணமடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதிவை பலரும் ரீட்வீட் செய்து தங்களுடைய வேண்டுதலை பதிவுசெய்து வருகின்றனர். தோனியின் தந்தை பன் சிங் மற்றும் தாய் தேவகி தேவி ஆகிய இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமாக இருப்பதை தொடர்ந்து அங்கு ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இப்போட்டியில் தோனி களமிறங்கி விளையாடி வருகிறார்.