Vinesh Phogat: வினேஷ் போகத் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடும் தருணத்திற்காக காத்திருப்பதாக, மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தெரிவித்துள்ளார்.
சரித்திரம் படைத்த வினேஷ் போகத்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 50 கிலோ மல்யுத்தப் பிரிவில், இந்தியா சார்பில் வினேஷ் போகத் பங்கேற்றார். அதில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானை சேர்ந்த யூயி சசாகியையும், காலிறுதியில் உலகின் எட்டாம் வரிசை வீராங்கனையான உக்ரைனின் ஒக்ஷானா லிவாச்-சையும் வீழ்த்தி அசத்தினார். தொடர்ந்து அரையிறுதிப் போட்டியில்,, கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற கணக்கில் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்த பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல், இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை வினேஷ் போகத் நிகழ்த்தினார். இதன் மூலம் இறுதி போட்டியில் வினேஷ் போகத் வெற்றி பெற்றால் தங்கமும் தோற்றால் சில்வரும் பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அதேநேரம், பாஜகவை பலர் கடுமையாக சாடி வருகின்றனர்.
மோடி தொலைபேசியில் பேசுவாரா? - பஜ்ரங் பூனியா:
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, ” வினேஷ் போகத்திற்கு ஃபோன் மூலம் வாழ்த்து செய்தி செல்லும் என்பதை நான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அந்த நேரத்தில் அவர் மீண்டும் ”இந்தியாவின் மகள்” ஆகிவிடுவார். டெல்லி ஜந்தர் மந்தரில் நாங்கள் போராடியது குறித்து ஒரு வார்த்தை கூட பேசாதவர்கள், வினேஷ் போகத்துக்கு ஃபோன் செய்து வாழ்த்த துணிவு எப்படி வரப்போகிறது? என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்” என தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களை, பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வது வழக்கம். அதனை பஜ்ராங் பூனியா தற்போது மறைமுகமாக விமர்சித்துள்ளார்
முன்னதாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “பாரிஸ் ஒலிம்பிக்கில்அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி வாகை சூடி பெண் சிங்கமாக திகழ்கிறார் வினேஷ் போகத். 4 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனையை வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார். ஆனால் இவரை சொந்த நாடே உதறித்தள்ளியது. தெருக்களில் தரதரவென இழுத்துச்சென்றது. இவர்தான் இப்போது உலகையே ஆளப்போகிறார். ஆனால், சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார்” எனவும் பஜ்ராங் பூனியா பதிவிட்டுள்ளார்.
பாஜகவை அட்டாக் செய்த ராகுல் காந்தி:
ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “வினேஷ் மற்றும் அவரது அணியினரின் போராட்டத்தை மறுத்தவர்கள் மற்றும் அவர்களின் எண்ணம் மற்றும் திறன்களைக் கூட கேள்வி எழுப்பிய அனைவருக்கும் அவர்களுக்கான பதில் கிடைத்துள்ளது. இந்தியாவை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று அவரது வீர மகளின் முன் சரிந்தது” என குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவை சாடும் நெட்டிசன்கள்:
வினேஷ் போகத்தின் கடினாமான காலத்தில் உறுதுணையாக இல்லாதவர்கள், இன்று அவரது வெற்றியை கொண்டாடி தகுதியற்றவர்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் டெல்லியில் வினேஷ் போகத் ஆகியோர், போராட்டக்களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது தொடர்பான புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து, இந்தியா அவர்களுக்கு செய்தது இதுதான் என சாடி வருகின்றனர்.
மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம்:
பாஜக முன்னாள் எம்.பியும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ்பூஷன் சிங், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு குற்றச்சாட்டு எழுந்தது. ஏராளமான மல்யுத்த வீரர், வீராங்கனைகள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வினேஷ் போகத்தும் அடங்குவார். போராட்டத்தில் ஈடுபட்ட வினேஷ் போகத் போன்றோர் அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், சர்வதேச போட்டியில் பங்கேற்க திறனற்றவர்கள் எனவும், பாஜகவினர் கடுமையாக சாடினர். இந்நிலையில் தான், வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.