இன்னும் சில நாட்களில், சுதந்திர தினம் கொண்டாடவுள்ள நிலையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், முதல் தேர்தல் எப்படி நடைபெற்றது, பலர் தங்களது பெயரையே , தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை, எப்படி முதல் தேர்தல் நடைபெற்றது? தேர்தல் ஆணையம் எப்படி தேர்தலை நடத்தியது என்பது குறித்து காண்போம்.
அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கம்:
இந்தியா 1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயர்களின் ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்தது. இதையடுத்து, இந்தியாவுக்கு இடைக்கால பிரதமராக நேரு தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவுக்கு அரசியலமைப்பு சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. அதற்கிடைப்பட்ட காலத்தில், இந்தியா 1935 ஆம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. தற்காலிக நாடாளுமன்றமாக, அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை செயல்பட்டது.
இந்தியாவுக்கு என இந்தியர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அம் தேதி நடைமுறைக்கு வந்ததையடுத்து, இந்தியாவிற்கு என தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம்:
அதன்பொருட்டு, 1956 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் ஆண்டு இந்திய தேர்தலை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். இந்தியாவில், பொதுமக்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வேண்டும், எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என கண்டறிய வேண்டும், முதல் தேர்தல் என்பதால், பொதுமக்களுக்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என கற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட பல சிக்கல்கள், தேர்தல் ஆணையத்தின் முன் இருந்தது.
வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் போது, பல இடங்களில் பெண்கள் தங்களது பெயர்களையே கூற மறுத்துவிட்டனர், அவர்கள் தங்களது கணவரது பெயரை கூறி, இவரது மனைவி என்றே அடையாளப்படுத்தி வந்தனர். இதனால், வாக்காளர் பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
முதல் தேர்தல்:
1950களில் இந்தியாவில் உள்ள 37 கோடி மக்கள் தொகையில், 17 கோடி பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக உள்ளனர். அதில் 8 கோடி பேர் பெண் வாக்காளர்கள் அடங்குவர். அப்போது வாக்களிக்க தகுதியான வயதானது 21ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து, இந்தியாவுக்கான நாடாளுமன்ற தேர்தலுடன் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் சேர்த்து நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தலானது 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 489 நாடாளுமன்ற தொகுகளுக்கும், 4, 500 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தலானது நடைபெற்றது.
முதல் பிரதமர் நேரு:
தேர்தலில், பதிவான மொத்த வாக்குகளின் சதவிகிதமானது 45% சதவிகிதமாக இருந்ததாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 489 தொகுதிகளில் 364 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. அடுத்ததாக 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாம் இடம் பெற்று, எதிர்க்கட்சியாக உள்ளது. இதையடுத்து , இந்திய நாட்டின் பிரதமராக ஜவஹர்லால் நேரு தேர்வு செய்யப்பட்டார்.