பெங்களூருவில் பைக் டாக்ஸிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுனர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுளனர். சட்டவிரோத பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.


ஆட்டோ சேவை:


பெருநகரங்களில் என்னதான் மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு இருந்தாலும், இன்றளவும் ஆட்டோ சேவை என்பது தவிர்க்க முடியாததாக தான் உள்ளது. குறிப்பாக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பேருந்து, மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை காட்டிலும், குறிப்பிட்ட இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆட்டோ தான் சரியான தேர்வாக உள்ளது. ஆட்டோ ஓட்டுவதை நம்பி லட்சக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான், ஆட்டோக்களுக்கு போட்டியாக பெருநகரங்களில் பைக் டாக்ஸி சேவை அதிகரித்துள்ள்து. இந்த சட்டவிரோத சேவைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தான், பெங்களூருவில் இன்று ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.


2 லட்சம் ஆட்டோக்கள் நிறுத்தம்


சட்டவிரோத பைக் மற்றும் வைட்போர்ட் டாக்ஸிகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பெங்களூரு ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள் ஒன்றிணைந்து 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன.  இதன்படி, ஞாயிற்றுக்கிழமை நாள்ளிரவு தொடங்கி திங்கட்கிழமை நள்ளிரவு வரை ஆட்டோக்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால், பெங்களூரு நகரில் இன்று மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆட்டோக்கள் ஓடாது என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.


ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி:


போராட்டத்தின் ஒரு அங்கமாக ஆட்டோ ஓட்டுனர்கள் பெங்களூரு நகர ரயில் நிலையத்திலிருந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வீடு வரையில் பேரணியாக செல்லவும் திட்டமிட்டுள்ளனர். 


ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை:


இதுதொடர்பாக பேசியுள்ள ஆட்டோ ஓட்டுனர் சங்க பிரதிநிதிகள்,  ரேபிடோ உள்ளிட்ட சட்டவிரோத பைக் டாக்ஸி சேவைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம், ஆட்டோ ஓட்டுநர்களின் நலனைப் பாதுகாக்க அரசாங்கம் மோசமாகத் தவறிவிட்டது. பைக் டாக்சி சேவைகள் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. இதுபோன்ற சேவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பல முறை முறையிட்டாலும், அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. பைக் டாக்ஸி சேவை இளைஞர்களையும் ஊக்குவித்து ஏமாற்றி சுரண்டுகிறது. இந்த செயலி சட்டவிரோதமாக கல்லூரி மாணவர்களை பணியில் அமர்த்துகிறது.


தடை விதிக்க கோரிக்கை;


போக்குவரத்துத் துறையிடம் இருந்து எந்த உரிமமும் பெறாமல் இரு சக்கர வாகனங்களில் (தனிப்பட்ட பயன்பாட்டிற்காக) வெள்ளைப் பலகைகளை வைத்து "சட்டவிரோத" பைக் டாக்சி சேவைகளைப் பயன்படுத்த இளைஞர்களை தூண்டுகிறது. எனவே, நகரத்தில் மொபைல் ஆப் அடிப்படையிலான ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கும் பைக் டாக்ஸி சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும்” என அரசுக்கு வலியுறுத்துகின்றனர்.