கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய தங்க செயினை உரிமையாளர் பத்திரமாக மீட்டெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சவரன் தங்க நகை ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. ஆனால் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.5500-க்கும் அதிகமாக விற்பனை ஆகிறது. இன்றைய தேதிக்கு ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தங்கம் என்பது எட்டாக்கனியாகவே மாறி வருகிறது. இதனால் புதியதாக நகையை வாங்காவிட்டாலும், இருப்பதையாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென கண்ணும் கருத்துமாக உள்ளனர். இந்நிலையில், ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 3 சவரன் தங்க செயினை வளர்ப்பு நாய் விழுங்கி விட்டால் அப்படியே விட்டு விட முடியமா என்ன. அவ்வாறு கேரளாவில் வளர்ப்பு நாய் ஒன்று விழுங்கிய செயினை அதன் உரிமையாளர் பத்திரமாக மீட்டுள்ளார்.
நடந்தது என்ன?
பாலக்காடு, ஓலவக்கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மனைவி பேபி, தான் அணிந்திருந்த 3 சவரன் செயினை வீட்டின் கண்ணாடி முன்பு கழற்றி வைத்திருந்தார். தனது வேலைகளை முடித்துக்கொண்டு சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்த போது கண்ணாடி முன்பு தான் வைத்த அந்த நகையை காணவில்லை. இதனால் பதறி போன பேபி, வீடு முழுவதும் தேடி பார்த்தார். எங்கு தேடியும் நகையை காணவில்லை.
திருடியது யார்?
நகை படுக்கை அறையில் உள்ள கண்ணாடி முன்புதான் வைத்தேன், வீட்டுக்கு யாரும் வரவும் இல்லை. அதன்பிறகு நகை எப்படி மாயமானது என்று தெரியாமல் அந்த பெண் குழம்பி போனார். அப்போதுதான் வீட்டில் தான் வளர்த்து வந்த செல்ல நாய் படுக்கை அறைக்குள் சென்று விட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் தரையில் கிடந்த ஒரு பென்சிலை கடித்து குதறி அப்படியே விழுங்கியது. இதை கவனித்த பேபிக்க, தனது நகையை நாய் விழுங்கி இருக்குமோ? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவம் தொடர்பாக தனது கணவரிடம் கூறிய பேபி, தனது வளர்ப்பு நாயை மாவட்ட கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நாயின் வயிற்றை எக்ஸ்ரே எடுத்ததில், பேபியின் செயின் நாயின் வயிற்றில் இருப்பது கண்டறியப்பட்டது.
செயினை மீட்டது எப்படி?
இதையடுத்து நகையை மீட்பதோடு, செயின் தொடர்ந்து உள்ளேயே இருந்தால் நாயின் உயிருக்கும் ஆபத்து என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் நகையை அகற்ற மருத்துவர் பரிந்துரைத்தார். இருந்தாலும் ஒரு சிறு முயற்சியாக மலத்துவாரம் வழியாக நகையை வெளியே எடுப்பதற்காக நாய்க்கு, ரொட்டி மற்றும் பழங்களை கொடுத்துள்ளனர். ஆனால், நகை வெளியே வராததால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என முடிவெடுத்துள்ளனர். அதற்காக இறுதியாக நாய்க்கு ஒருமுறை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அப்போது, செயின் வெளியே வரும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே நாய்க்கு பேதி மாத்திரை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு நாயை வீட்டுக்கு கொண்டு சென்று அது எங்கேயும் வெளியே சென்றுவிடாமல் வீட்டில் இருந்தோர் கண்காணித்தனர். மறுநாள் அந்த நாயின் வயிற்றில் இருந்து 3 பவுன் தங்க செயின் வெளியே வந்தது.