பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வியாழக்கிழமை காலை சோதனை நடத்தியதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


 






பிஎஃப்ஐ அமைப்புக்கு மீதான நடவடிக்கையின் ஓர் அங்கமாக, உத்தரப் பிரதேசம், கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பத்து மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனைகளை நடத்தியது.


நாடு தழுவிய அளவில் நடத்தரப்பட்ட சோதனையில் பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ, அமலாக்கத்துறை இயக்குனரகம் (இடி) மற்றும் மாநில போலீசார் ஒருங்கிணைந்து சோதனை நடத்தினர். அதிகபட்சமாக கேரளாவில் 22 பேரும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் தலா 20 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


அடுத்தபடியாக, ஆந்திரப் பிரதேசத்தில் 5 பேரும், அஸ்ஸாமில் 9 பேரும் கைது செய்ப்பட்டுள்ளனர். டெல்லி (3), மத்தியப் பிரதேசம் (4), புதுச்சேரி (3), தமிழ்நாடு (10), உத்தரப் பிரதேசம் (8) மற்றும் ராஜஸ்தான் (2) ஆகிய மாநிலங்களிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இதுவரை, நடைபெற்ற மிகப்பெரிய சோதனை நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தீவிரவாத குழுக்களில் சேர மற்றவர்களை மூளைச்சலவை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாகக் கூறி சோதனைகள் நடத்தப்படுகின்றன.


கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பிஎஃப்ஐ அமைப்பின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து பிஎஃப்ஐ வெளியிட்ட அறிக்கையில், "அமைப்பின் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் சோதனைகள் நடைபெறுகின்றன. மாநில கமிட்டி அலுவலகமும் முற்றுகையிடப்படுகிறது. 


எதிர்ப்புக் குரல்களை அடக்குவதற்கு ஏஜென்சிகளைப் பயன்படுத்தும் பாசிச ஆட்சியின் நகர்வுகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்" என தெரிவித்துள்ளது. சோதனை நடத்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அலுவலர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்.


தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், என்ஐஏ தலைவர் தினகர் குப்தா மற்றும் இந்திய உளவுத்துறை இயக்குனர் தபன் டேகா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


செவ்வாயன்று, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 38 இடங்களில் சோதனை நடத்திய பின்னர், நான்கு பிஎஃப்ஐ நிர்வாகிகள் மீது சட்டவிரோத நடவடிக்கை (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் என்ஐஏ வழக்கு பதிவு செய்துள்ளது.