உத்தரப் பிரதேசத்தில் ஏழு வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்ப முடியாமல் 18 மணி நேரத்துக்கும் மேலாக சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உத்தரப் பிரதேசம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த தானாரி பட்டியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இப்பள்ளியில் படிக்கும் 1ஆம் வகுப்பு மாணவியை நேற்று முன் தினம் (செப்.20) பள்ளி அறையிலேயே வைத்து ஊழியர்கள் கவனக் குறைவாக பூட்டியுள்ளனர்.


நேற்று முன் தினம் பள்ளி நேரம் முடிந்ததும் பள்ளி ஊழியர்கள் சரிவர அறையை ஆய்வு செய்யாமல் பூட்டிச் சென்ற நிலையில், அடுத்த நாள் காலை வரை சிறுமி பள்ளியில் தன்னந்தனியாக சிக்கிக்கொண்டதாக அப்பகுதி வட்டாரக் கல்வி அலுவலர் (பிஇஓ) போப் சிங் தெரிவித்துள்ளார்.


செப்.20ஆம் தேதி பள்ளி முடிந்து சிறுமி வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் பாட்டி பள்ளிக்கு உடனடியாகச் சென்று விசாரித்துள்ளார். ஆனால் சிறுமி பள்ளியில் இல்லை என்று ஊழியர்கள் கூறியதாக சிறுமியின் தாய் மாமா தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து சுற்றியிருந்த வனப்பகுதிகளில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்காத  நிலையில், அடுத்த நாள் காலை பள்ளியிலேயே சிக்கிக் கொண்டிருந்த சிறுமி மீட்கப்பட்டார். இந்நிலையில் மீட்கப்பட்ட சிறுமி தற்போது ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.


மேலும் பள்ளி ஊழியர்களின்  கவனக்குறைவு இது என்றும், இச்சம்பவம் குறித்து ஒட்டுமொத்த ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டாரக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


மற்றொரு சம்பவம்


இதே போல் முன்னதாக ராஜஸ்தான் மாநிலம், மாண்டியாவின் தங்களகரே கிராமத்தில், மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இந்நிலையில் பள்ளி முதல்வர், ஆசிரியர்களின் அலட்சியத்தால் தான் இச்சம்பவம் நிகழ்ந்ததாக மாண்டியா கலெக்டர் காட்டம் தெரிவித்திருந்தார்.


மாண்டியா, பாண்டவபுராவின், ஹிரேமரளி கிராமத்தை சேர்ந்த ஈரேகவுடா, லீலா தம்பதியின் மகன் கிஷோர், 14. இவர் மாண்டியாவின், தங்களகரே கிராமத்தில் உள்ள மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். ஜூலை 27ஆம் தேதி ஊருக்கு வந்திருந்த அவர், அதன்பின் ஆகஸ்ட் 8ஆம் தேதி பள்ளிக்குத் திரும்பினார்.


தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக, மகனை அழைத்து வர, பள்ளிக்கு பெற்றோர் சென்ற நிலையில், கிஷோர் அங்கு இல்லை. ஆசிரியரிடம் விசாரித்த போது, 'உங்கள் மகன் 20 நாள்களாக பள்ளிக்கே வரவில்லை' எனத் தெரிவித்துள்ளனர்.


இதில் பீதியடைந்த பெற்றோர் பள்ளியில் பார்த்த போது, மாணவரின் புத்தகங்கள், உடைகள் அப்படியே இருந்தன. கண்காணிப்புக் கேமராவில் கிஷோர் பள்ளி வளாகத்துக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. ஆனால் வெளியே செல்லும் காட்சி பதிவாகவில்லை. மாணவர்கள் தங்கும் அறையில், கிஷோர் எழுதியதாகக் கூறப்படும் கடிதமும் கிடைத்தது. அதில், 'இந்த பள்ளியில் படிக்க, எனக்கு விருப்பமில்லை. பல முறை பெற்றோரிடம் கூற முயற்சித்தேன். என்னைத் தேடாதீர்கள்' என கூறப்பட்டிருந்தது.


ஆனால், இந்தக் கடிதம் தங்கள் மகன் எழுதியது இல்லையென பெற்றோர் தெரிவித்துள்ளனர்.மாணவர் மாயம் குறித்து, மாண்டியாவின் கெரேகோடு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்தனர். காவல் துறையினரும் பல கோணங்களில் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. 


இந்நிலையில் முன்னதாகப் பேசிய மாண்டியா மாவட்ட கலெக்டர் அஸ்வதி கூறியதாவது: மாணவர் காணாமல் போனதில் ஆசிரியர்கள், பள்ளி முதல்வரின் அலட்சியம் தென்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்புதான், எனக்குத் தகவல் வந்தது.


விசாரணை நடத்தி, அறிக்கை அளிக்கும்படி கல்வித்துறை துணை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை வந்த பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தோர் பணியிடை நீக்கம் செய்யப்படுவர்” எனத் தெரிவித்திருந்தார்.