ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா சரமாரி பதில் அளித்துள்ளது.


கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாடுக்கு ஐநாவில் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை என இந்தியா தெரிவித்துள்ளது.


சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு என்ற தலைப்பில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் விவகாரம் குறித்து எழுப்பினார்.


பின்னர் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "நம் காலத்தில் முக்கிய சவால்களாக உள்ள பெருந்தொற்று, காலநிலை மாற்றம், மோதல் அல்லது பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில்தான் ஐநாவின் திறன் சார்ந்திருக்கிறது" என்றார்.


இந்தியாவின் தலைமையில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சாடி பேசிய ஜெய்சங்கர், "பன்முகத்தன்மையை சீர்திருத்துவதற்கான அவசரத்தில் நாம் இன்று வெளிப்படையாக கவனம் செலுத்துகிறோம். 


நாம் இயற்கையாகவே நமது குறிப்பிட்ட விழுமியங்களை கொண்டிருப்போம். ஆனால், குறைந்த பட்சம் இதை மேலும் தாமதப்படுத்த முடியாத சூழல் கூடி வருகிறது. நாம் சிறந்த தீர்வுகளைத் தேடி கொண்டிருக்கும்போது இம்மாதிரியான அச்சுறுத்தல்களை இயல்பாக்குவதை ஒருபோதும் ஏற்று கொள்ள கூடாது.






அத்தகைய அச்சுறுத்தல்களை இயல்பாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று உலகம் கருதுவதை நியாயப்படுத்தும் கேள்வி கூட எழக்கூடாது. இது, எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கும் பொருந்தும்.


கொல்லப்பட்ட அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை விருந்தாளியாக வைத்து கொண்டு அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய நாடுக்கு ஐநாவில் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க தகுதி இல்லை" என்றார்.


ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பதவியை இந்தியா ஏற்றிருக்கும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் சீர்திருத்தப்பட்ட பலதரப்பு உறவு குறித்த தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக, ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஜெய்சங்கர் சென்றிருந்தார்.


ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் ருச்சிரா காம்போஜ் தலைமையில் இந்த விவாதம் நடைபெற்றது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதில் இருந்தே இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வருகிறது.


இந்தியாவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய தூதரை அவரது பதவியில் இருந்து நீக்கியது.