டெல்லி ஜமா மஸ்ஜிதுக்கு பெண்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மஸ்ஜித்தின் இமாம் தெரிவித்துள்ளார்.


முன்னதாக மசூதி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நோட்டீஸில், பெண் தனியாகவோ, பெண்கள் கூட்டமாகவோ மசூதிக்கு வர தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் சையது அகமது புகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மாநில துணைநிலை ஆளுநர் எனக்குப் பேசினார். அதனால் நாங்கள் தடை உத்தரவுகள் ஒட்டப்பட்ட நோட்டீஸ் போர்டுகளை அப்புறப்படுத்தியுள்ளோம். ஆனால் மசூதிக்கு வருவோர் அதன் புனிதத்தன்மை அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.


முன்னதாக,  ‘பெண்கள்’ தனியாக இனி மசூதிக்கு வரக்கூடாது என்ற ஜமா மசூதியின் விதிக்கு எதிராக டெல்லி ஜமா மஸ்ஜித் இமாமுக்கு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தற்போது நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ஸ்வாதி மாலிவால், “ஜமா மசூதிக்குள் பெண்கள் நுழைவதைத் தடுக்கும் முடிவு முற்றிலும் தவறானது. ஆணுக்கு எப்படி வழிபட உரிமை இருக்கிறதோ அதே அளவு பெண்ணுக்கும் உரிமை உண்டு. இதுதொடர்பாக ஜமா மஸ்ஜித் இமாமுக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன். இதுபோன்ற பெண்களின் நுழைவைத் தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறியிருந்தார்.


ஜமா மஸ்ஜித் மக்கள் தொடர்பு அதிகாரி சபியுல்லா கான், பெண்கள் நுழைவது தடை செய்யப்படவில்லை, ஆனால் பெண்கள் தனியாக வர முடியாது, மசூதி வளாகம் ஆண்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கும் பெண்களின் "சந்திப்பு மையமாக" மாறுவதைத் தடுக்க மசூதி நிர்வாகத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.


மேலும், குடும்பத்துடன் வருவதற்கும், திருமணமான தம்பதிகள் வருவதற்கும் எந்த தடையும் இல்லை. ஆனால், யாரையாவது சந்திப்பதற்காக இங்கு வருவது, அதை ஒரு பூங்காவாக நினைப்பது, டிக்டாக் வீடியோக்களை மசூதிக்குள் உருவாக்குவது, நடனம் ஆடுவது போன்றவற்றை எந்த மத இடமாக இருந்தாலும், அது மசூதியாகவோ, கோயிலாகவோ, குருத்வாராவாகவோ இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கான் விளக்கியிருந்தார்.


இந்நிலையில்,டெல்லி ஜமா மஸ்ஜிதுக்கு பெண்கள் வருவதற்கு விதிக்கப்பட்ட தடைகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக மஸ்ஜித்தின் இமாம் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் இளம் பெண் ஷ்ரத்தாவை அஃப்தாப் பூனாவாலா என்பவர் கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசி எறிந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருந்த இஸ்லாமிய போதகர் ஒருவர் லிவ் இன் உறவுகள் இதுபோன்ற வன்முறைகளுக்கு வழிவகுக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.