ஒருநாள் பயணமாக நாளை தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை நாட்டிற்கு அர்பணிக்கிறார். தொடர்ந்து  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.


பிரதமர் மோடியுடன் சந்திப்பா?


இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பானி பழனிசாமியும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தனித்தனியே நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு உறுதியாகும் பட்சத்தில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு இருவருக்கு இடையே நடக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.


இதுகுறித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கூறுகையில், "பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் எடப்பாடி பழனிசாமி அவரை சந்திப்பார் " என்றார். அதேபோல, அரசியல் வாழ்க்கையில் தொடர் பின்னடைவை ஓ.பன்னீர்செல்வமும், மோடி சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.


இபிஎஸ், ஓபிஎஸ் போட்ட திட்டம்:


தற்போது வரை, இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோருக்கு பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், தனித்தனியே சந்திக்க நேரம் ஒதுக்கப்படலாம் என்று பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன்.


அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுகவுக்கும் பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.


அதிமுக, பாஜக கூட்டணி குறித்து தூத்துக்குடியில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அண்ணாமலை, "இத்தனை ஆண்டுகளாக கூண்டில் இருந்த கிளி தற்போது கூண்டை விட்டு வெளியே வர தயாராகி விட்டது. 


கிளி பறக்க தயாராக உள்ளது. பறக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. பாஜகவால் பறக்க முடியும். பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்து விட்டது. தமிழகத்தில் புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது" என்றார். ஆனால், அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். 


சமீபத்தில், தமிழ்நாடு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார், செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். 


தொடர்ந்து பாஜகவில் இருந்து வெளியேறும் மாவட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் பிற கட்சிகளிலும் குறிப்பாக அதிமுகவிலும் சேர்ந்த வண்ணம் இருந்தனர். இதனால் அதிமுக, பாஜக கூட்டணிக்கு இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.