மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நமது ஆயுதப்படைகளை மாற்றியமைத்து மேலும் நவீனப்படுத்துவதற்காக அக்னிபாத் என்ற புரட்சிகரமானத் திட்டத்தைக் கொண்டு வருகிறோம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு அக்னிவீரர் என்ற பெயரில் ராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.


இத்திட்டத்தில் சேர்வதற்கான  17 வயது முதல் 21 வயது வரை இருக்க வேண்டும். பணிக்காலம் 4 ஆண்டுகளுக்கு இருக்கும். இந்த 4 ஆண்டுகளில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். 25 சதவீதம் பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டது. 4 ஆண்டுகளில் 45 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள்.


அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமாக இது அமையும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால், வடமாநிலங்களில் இத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 9க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் ரயில்களை கொளுத்துவதோடு, ரயில் நிலையங்களை சூறையாடி வருகின்றனர்.






 


அக்னிபாத் திட்டம் குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, ஒரு பக்கம் பாகிஸ்தான் மூலமும் மற்றொரு பக்கம் சீனா மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், மத்திய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டம் படைகளின் செயல்திறனை குறைத்துவிடும். நமது ராணுவத்தின் கண்ணியம், பாரம்பரியம், வீரம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்யும் இந்த முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த நிலையில் ரேங்க் இல்லை, ஓய்வூதியம் இல்லை, 2 ஆண்டுகளாக ஆள் சேர்க்கவும் இல்லை. 4 ஆண்டுகளுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை. ராணுவத்துக்கு மரியாதையும் இல்லை. வேலை வாய்ப்பற்ற நாட்டு இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள். அவர்களை அக்னிபாத்தில் இணைத்து அவர்களது பொறுமையுடன் அக்னி பரிட்சை செய்ய வேண்டாம் பிரதமரே என்று கூறியிருந்தார்.






 


 






வன்முறைகள் வடமாநிலங்களில் தீவிரமாக பரவி வருவதையடுத்து இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ராகுல்காந்தி, அக்னிபாத்தை இளைஞர்கள் நிராகரித்துவிட்டார்கள். வேளாண் சட்டங்களை விவசாயிகள் நிராகரித்துவிட்டார்கள். பணமதிப்பிழப்பை பொருளாதர நிபுணர்கள் ஏற்கவில்லை. ஜிஎஸ்டியை வணிகர்கள் நிராகரித்துவிட்டனர். நாட்டு மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை பிரதமரால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனெனில் அவரது நண்பர்கள் சொல்வதைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை என்று விமர்சித்துள்ளார்.