நேபாளி மொழி இந்திய மொழியல்ல எனக் கூறப்பட்டு நேபாளி பேசும் கோர்க்கா சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்களிடன் நடன நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த அனைத்திந்திய பெண்கள் மாநாடு என்ற அமைப்பு கடும் கண்டனத்திற்குப் பிறகு மன்னிப்பு கோரியுள்ளது. 


மேலும், இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை கோரப் போவதாக கோர்க்கா இன அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. 


`ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுவதும் இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சந்திர பிரபா பாண்டே மேற்கு வங்கத்தின் காலிம்போங் பகுதியைச் சேர்ந்த கோர்க்கா இனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்திய மொழியைச் சேராதவை என்பதால் அனுமதிக்க முடியாது எனக் கூறியிருந்தார். மேலும், நேபாளி இந்திய மொழி இல்லை என்பதால் அந்த மொழியில் தேசிய கீதம் பாட முடியாது எனவும் கூறியிருந்தார். பாரதிய கோர்க்கா யுவா பாரிசங் என்ற அமைப்பின் எதிர்ப்புக்குப் பிறகு, அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பு மன்னிப்பு கோரியுள்ளதோடு, தங்களின் உறுப்பினரின் கருத்துகளையும் கண்டித்துள்ளது. 







அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பின் தலைவர் ஷீலா காக்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், `எங்கள் உறுப்பினரின் அறியாமைக் கடுமையாக எதிர்ப்பதோடு கண்டிக்கிறோம். அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பின் அனைத்து உறுப்பினர்களின் சார்பாக, நமது கோர்க்கா சகோதரர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறோம்’ எனக் கூறி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 



டார்ஜிலிங் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி ராஜு பிஸ்டா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அனைத்திந்திய பெண்கள் மாநாடு அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சந்திர பிரபா பாண்டே தன் கையால் எழுதிய மன்னிப்புக் கடிதத்தை இணைத்துள்ளார். 






இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ராஜு பிஸ்டா, `கடந்த காலங்களின் நம் மக்கள் இதுபோன்ற இனத்துவேஷ கருத்துகளையும், பாகுபாடுகளையும் அனுபவித்த போது, அவற்றை எதிர்க்காமல் இருந்திருக்கிறோம்.. ஆனால் இனி அதுபோல எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது’ எனக் கூறியுள்ளார்.