மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என, எதிர்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
மணிப்பூர் விவகாரம்:
மணிப்பூரில் குக்கி மற்றும் மைத்தேயி இன மக்களிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் மோதலால் மாநிலமே கலவர பூமியாக மாறியுள்ளது. அதன் உச்சபட்சமாக தான், இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கொடுமைப்படுத்தியதோடு, ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும், மணிப்பூர் விவகாரத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே, மணிப்பூர் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
முதல்நாளே முடங்கிய நாடாளுமன்றம்:
இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது, உடனடியாக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும், மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் முடங்கிய அவைகள், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு உறுதி..!
எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் நேற்று பேசிய நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி “மணிப்பூர் விவகாரம் மிகவும் முக்கியாமானது. அதுதொடர்பாக நிச்சயமாக இரு அவைகளிலும் விவாதிக்கப்படும், உள்துறை அமைச்சர் விரிவான விளக்கமளிப்பார். அதற்கான தேதியை சபாநாயகர் இறுதி செய்யும் வரை பொறுத்திருங்கள்” என தெரிவித்து இருந்தார்.
எம்.பிக்கள் ஒத்திவைப்பு தீர்மானம்:
இந்நிலையில், எதிர்கட்சிகளை சேர்ந்த பல்வேறு எம்.பிக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மானத்திற்கான நோட்டீஸை வழங்கி வருகின்றனர்.
குவியும் மனுக்கள்:
அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்,ரஞ்சீத் ரஞ்சன் , சக்திசிங் கோஹில், டாக்டர் சையத் நசீர் ஹுசைன் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மானம் மற்றும் அலுவல் தொடர்பான நோட்டிஸ் வழங்கியுள்ளனர். திமுக எம்பி திருச்சி சிவா அலுவல் தடை நோட்டீஸ் வழங்கியுள்ளார். இதேபோன்று, ஆம் ஆத்மி மற்றும் பிஆர்எஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டிஸ் வழங்கியுள்ளனர்.
11 மணியளவில் கூடும் அவை..!
இதையடுத்து, காலை 11 மணியளவில் இரண்டாவது நாளாக நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட உள்ளது. இன்றும் மணிப்பூர் விவகாரம் இரு அவைகளிலும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மணிப்பூர் விவகாரத்தை மத்திய அரசு முறையாக கையாளவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.