நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. டெல்லி,கர்நாடகா,தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த மாநிலங்களில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற படுக்கை வசதி இல்லாமகல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்டவற்றிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பூசியும் போதிய அளவில் இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணியும் மந்தமாக உள்ளது. 


இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளனர். அதில் 9 அம்ச கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், "இந்தியாவில் தற்போது கொரோனா சூழல் பெரிய பேரிடராக மாறியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பல முறை நாங்கள் உங்களுடைய கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறோம். ஆனால் நாங்கள் கூறிய அனைத்து கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை உங்கள் அரசு நிராகரித்து விட்டது. அதுவும் தற்போதைய நிலைமைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.




இந்தச் சூழலில் தற்போது மத்திய அரசு போர்க்கால முறையில் செயல்பட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள எடுக்க வேண்டும். அவை



  • மத்திய அரசு உள்நாட்டிலிருந்து மற்றும் வெளிநாட்டிலிருந்தும் கொரோனா தடுப்பூசியை வாங்கி மாநிலங்களுக்கு தரவேண்டும்.

  • உடனடியாக நாடு முழுவதும் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தும் பணியை வேகமாக தொடங்க வேண்டும்.

  • மேலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். இதற்காக தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிய அனுமதி வழங்கவேண்டும்.

  • புதிதாக கட்டப்பட்டு வரும் சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தை நிறுத்த வேண்டும். அதற்காக ஒதுக்கிய நிதியை ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி வாங்க செலவிட வேண்டும்.

  • பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட 35000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டை தடுப்பூசி வாங்க செலவு செய்ய வேண்டும்.

  • பிஎம் கேர்ஸ் நிதியில் இருக்கும் அனைத்து நிதியையும் ஆக்சிஜன், தடுப்பூசி வாங்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உடனடியாக பயன்படுத்துங்கள்

  • கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும்.

  • ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்க வேண்டும்.

  • புதிதாக பிறப்பிக்கப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று விவசாயிகளுக்கு நல்ல வழியை உண்டாக்க வேண்டும்.


இந்த கோரிக்கை தொடர்பாக உங்களுடைய பதிலை நாட்டு நலனிற்காக நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.