நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தால் பெருமளவில் உயிர் ஆபத்து நிலவிவருகிறது. இதைக் குறைக்கவும் தடுக்கவுமான முயற்சியில் சித்த மருந்தான கபசுரக்குடிநீரை இலவசமாக விநியோகிக்க மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மத்திய ஆயுர்வேத, யோகா, யுனானி, சித்தா, ஓமியோபதி மருத்துவ - ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில், கபசுரக்குடிநீருடன், ஆயுஷ்-64 எனும் ஆயுர்வேத மருந்தும் வழங்கும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி மத்திய அமைச்சர் கிரென் ரிஜிஜு இதைத் தொடங்கிவைத்தார். இதில் ஆயுஷ்-64 மருந்தானது, 1980-களில் மலேரியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு நல்ல பலனை அளித்த மருந்தாகும். சளி, காய்ச்சலுக்கான இந்த மருந்து, கொரோனாவின் லேசான, மிதமான பாதிப்பு நிலைகளில் நல்ல பலனை அளித்து வருகிறது என்றும் நாளடைவில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவமனை சோதனைகளில் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


கபசுரக் குடிநீரின் பயன்பாட்டையும் ஆய்வுகளில் உறுதிசெய்த அமைச்சகம், இரண்டு மருந்துகளையும் பரவலாகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. இரண்டு மருந்துகளையும் அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகளுக்கும் லேசான, மிதமான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கும் பொதுவான சிகிச்சையுடன் சேர்த்து வழங்கலாம் என ஆயுஷ் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. 


சென்னையை அடுத்த தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், கபசுரக் குடிநீர் இலவச விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் உறவினர்களோ நண்பர்களோ நேரடியாகச் சென்று இதைப் பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனத்தின் இயக்குநர் மீனா குமாரி தெரிவித்துள்ளார். கொரோனா பரிசோதனை முடிவைக் கொண்டுசெல்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 




சென்னையில் மட்டுமின்றி, ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் கபசுரக் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. திருப்பதியில் உள்ள பத்மாவதி கோவிட் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நேற்று கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் மருத்துவமனை சித்த ஆய்வுப் பிரிவும் திருப்பதி நகர வளர்ச்சி ஆணையமும் இணைந்து இதில் ஈடுபட்டுள்ளன. திருப்பதி வளர்ச்சி ஆணையத்தின் செயலாளர் லட்சுமி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். 20 நாள்கள் வரை இதை நோயாளிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீர் விநியோக இயக்கத்துக்கு கே.சாம்ராஜ் என்பவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தேவையுள்ளவர்கள் 86860 88616, 77940 33341 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.