டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருந்தால் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 என்கிற ஹாஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
டெல்லி குண்டுவெடிப்பு:
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் குண்டுவெடிப்பி நிகழ்ந்த சம்பவத்தில், பலி எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சம்பவத்தையடுத்து, டெல்லி காவல்துறை உயரதிகாரிகளுடன் அவசர கூட்டம் நடத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து கோணங்களிலும் விசாரணை முடிக்கிவிடப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர்:
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளையும், தீவிரவாத நிலையையும் தாக்கி அழித்தது. தாக்குதலில் உயிரிழந்த மக்களின் நினைவாக இந்த ராணுவ நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் 2.0:
இந்த நிலையில் இச்சம்பவத்திற்கு பின்னால் தீவிரவாத தொடர்பு இருந்தால் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0வை ஆரம்பிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பேச தொடங்கியுள்ளனர்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில் டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், இந்த முறை இந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் 2.0 மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
களத்தில் அமித் ஷா:
குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக வெளியிட்ட பதிவில், "இன்று மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகிலுள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் சில பாதசாரிகள் காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன.
சிலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. NSG மற்றும் NIA குழுக்கள், FSL உடன் இணைந்து, இப்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசியுள்ளேன்.
டெல்லி CP மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். அனைத்து கோணங்களிலும் உடனடியாக விசாரிக்கப்படும். முடிவுகளை பொதுமக்களுக்கு வழங்குவோம். நான் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்வேன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வேன்." என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்லி காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவரச கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார் அமித் ஷா. அதைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 என்கிற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்துள்ளனர்.