Operation Sindhu: ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்திற்கு மத்தியில் ஆப்ரேஷன் சிந்து என்ற பெயரில் தெஹ்ரானில் உள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது.
தாயகம் வந்த இந்திய மாணவர்கள்:
இஸ்ரேல் மட்டும் ஈரான் இடையேயான மோதல்கள் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானில் உள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அதன்படி, ஆப்ரேஷன் சிந்து என்ற இந்திய அரசின் திட்டத்திற்காக, ஈரான் தனது வான்வெளி கட்டுப்பாடுகளை நீக்கியதை அடுத்து, நமது நாட்டைச் சேர்ந்த 290 இந்திய மாணவர்கள் மற்றும் பக்தி பயணிகளை ஏற்றிச் வந்த விமானம் வெள்ளிக்கிழமை இரவு டெல்லியில் தரையிறங்கியது. சுமார் 1,000 இந்தியர்களை வெளியேற்றுவதற்காக மூன்று சிறப்பு விமானங்களுக்கு, அந்த நாடு தனது வான்வெளியைத் திறந்தது. அந்த மூன்று விமானங்களில் முதலாவது விமானமாகும்.
தொடர்ந்து, துர்க்மெனிஸ்தானின் தலைநகர் அஷ்கபாத்திலிருந்து மற்றொரு விமானம் அதிகாலை 3 மணியளவில் டெல்லிக்கு வந்தடைந்தது. அதில் வந்த 117 பேர் உட்பட, மொத்தம் 517 இந்தியர்கள் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளனர். மூன்றாவது விமானம் இன்றைய தினம் பிற்பகலில் டெல்லியை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள்:
இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியர்கள் தெஹ்ரானில் இருந்து மஷாத்துக்கு மாற்றப்பட்டனர். வெளியேற்றும் விமானங்கள் ஈரானிய விமான நிறுவனமான மஹானால் இயக்கப்பட்டு மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டன. "சரியான நேரத்தில் தலையிட்டு ஆதரவு அளித்ததற்காக இந்திய அரசு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றி. அவர்கள் திரும்பி வருவதற்காக ஆவலுடன் காத்திருந்த குடும்பங்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணம்" என்று ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர்.
இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல்:
நீண்டகால எதிரிகளான ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், ஈரானில் இருந்து தனது நாட்டினரை திரும்ப அழைத்து வருவதற்காக 'ஆபரேஷன் சிந்து' புதன்கிழமை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் கொண்ட குழு ஜூன் 13 ஆம் தேதி காலை இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற திடீர் தாக்குதலை நடத்தியது, இது ஈரானின் ராணுவ கட்டளையின் உயர் மட்டத்தை அழித்தது மற்றும் அதன் அணுசக்தி தளங்களை சேதப்படுத்தியது. ஈரான் வான்வழித் தாக்குதல்களால் பதிலடி கொடுத்தது. ஒருவார காலமாக இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன.