ஆங்கிலத்தில் பேசுவது அவமானம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார். ஆங்கிலம் என்பது அதிகாரம் என்றும் அடிமை சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

"ஆங்கிலம் என்பது அதிகாரம்"

நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய அமித் ஷா, "இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் அதனை அவமானமாக கருதுவார்கள். அத்தகைய சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை" என தெரிவித்திருந்தார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பல நாடுகளில் பேசுவது மட்டும் இல்லாமல், விஞ்ஞானம், மருத்துவம் என பல துறைகளில் கொடி கட்டி பறக்கும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை மட்டுப்படுத்துவது போல அமித் ஷா பேசியுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

Continues below advertisement

இந்த நிலையில், அமித் ஷாவின் கருத்து ராகுல் காந்தி பதிலடி அளித்துள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில், "ஆங்கிலம் என்பது அணை அல்ல. அது ஒரு பாலம். ஆங்கிலம் என்பது அவமானம் அல்ல. அது அதிகாரம். ஆங்கிலம் என்பது அடிமை சங்கிலி அல்ல. அது, அடிமை சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.

அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி:

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் நீங்கள் கேள்விகள் கேட்கவும், முன்னேறவும், சமமாக மாறவும் விரும்பவில்லை.

இன்றைய உலகில், ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போலவே முக்கியமானது. ஏனெனில், அது வேலைவாய்ப்பை வழங்கும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

 

இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்கும் இந்தியாவிற்கான பாதை இது" என பதிவிட்டுள்ளார்.