மேற்குவங்க அரசின் தலைமைச்செயலாளர் அலப்பன் பந்தியோபாத்யாய் விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி காட்டமாக பல கேள்விகளை முன்வைத்துள்ளார். இன்று - மே 31-ல் ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் அலப்பனுக்கு மூன்று மாத பணி நீட்டிப்பு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு முறைப்படி மாநில அரசு முன்னரே தெரிவித்து, கொரோனா மற்றும் யாஸ் புயல் பாதிப்புக்காக அவரின் சேவை தொடர்ச்சியாக இருப்பது மாநிலத்துக்கு நல்லது என மேற்குவங்க அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. பரஸ்பர ஆலோசனைக்குப் பிறகே அலப்பனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
அதையடுத்து ஒடிஷா, சத்திஸ்கர், மேற்குவங்க மாநிலங்களைத் தாக்கிய யாஸ் புயலின் பாதிப்புகளை கடந்த 28ஆம் தேதியன்று பிரதமர் மோடி விமானம் மூலம் பார்த்தார். பாதிப்பு தொடர்பாக மேற்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள கலைக்குண்டா விமானதளத்தில் அவசரமாக முதலமைச்சர்- பிரதமர் சந்திப்பும், அதையொட்டி ஆலோசனைக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமரைச் சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, யாஸ் புயல் பாதிப்புக்காக மேற்குவங்கத்துக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். உடனே அங்கிருந்து அவர் புறப்பட்டுவிட்டார்.
ஏற்கெனவே அரை மணிநேரம் பிரதமரைக் காக்கவைத்தார் என விமர்சனத்துடன், இதுவும் சேர, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் மம்தாவோ அந்தக் கூட்டம் பற்றி முன்னரே தன்னிடம் கூறப்படவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஆளுநருக்கும் என்ன வேலை என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம், தலைமைச்செயலாளர் அலப்பனையும் சுற்றிக்கொண்டது. முறைப்படி 60 வயதில் இன்று ஓய்வுபெற இருந்தவருக்கு மூன்று மாதம் நீட்டிப்பு தந்துவிட்டு, நான்கு நாட்களுக்குள் அவருக்கு அதிர்ச்சியை அளித்தது, மத்திய ஒன்றிய அரசு. கடந்த 28-ஆம் தேதி மேற்குவங்க அரசுக்கு மத்திய பணியாளர் துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில், அலப்பனை மத்திய அரசுப் பணிக்கு எடுத்துக்கொள்வதாகவும் இதற்கு அகில இந்திய ஆட்சிப் பணி விதிகளில் இடமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. (இன்று) மே 31 அன்று காலை 10 மணிக்கு புதுடெல்லியில் வடக்கு பிளாக் கட்டடத் தொகுதியில் உள்ள பணியாளர் துறையில் அலப்பன் நேரில் வரவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. அதாவது, புயல் பாதிப்பைப் பார்வையிட பிரதமர் மோடி சென்றுவந்த மறுநாள் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, முக்கியமானது.
வழக்கம்போல, இதையும் தன்னுடைய பாணியில் எதிர்கொண்டார், மம்தா பானர்ஜி. பிரதமர் மோடிக்கு இது குறித்து 5 பக்கக் காரசாரக் கடிதம் ஒன்றை அவர் இன்று முற்பகல் அனுப்பினார். அதில்,” மத்திய அரசின் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டுமென பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேற்குவங்க மக்களின் சார்பில் இதற்காக உங்களின் நல்லெண்ணத்தையும் மனச்சான்றையும் விழைகிறேன். மேற்குவங்க மாநில அரசு நெருக்கடியான இந்தக் கட்டத்தில் தலைமைச்செயலாளரை விடுவிக்கமுடியாது. சட்டரீதியான முறைப்படியான பரஸ்பர ஒப்புதலுடன் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு இன்னும் மதிப்பு இருக்கிறது. இந்திய ஆட்சிப் பணியின் விதிகள் சட்டத்தின் கட்டமைத்தலில் முக்கிய தாங்கியாக மாநிலக் கூட்டாட்சி அமையும்படிதான் வகுக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி அடிப்படைக்கு பெரும் ஒத்திசைவையும் பாதுகாப்பையும் தருவதற்காகத்தான் இந்த விதிகள் இருந்துவருகின்றன. கூட்டாட்சி முறையின் இணக்கப்பாட்டை சேதாரப்படுத்த விரும்ப மாட்டீர்கள்; பல்வேறு மாநிலங்களில் பணியாற்றும் அகில இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கான நல்லுணர்வையும் மீறமாட்டீங்கள் என நம்புகிறேன்.“ என்று மம்தா விவரித்துள்ளார். அதன் முத்தாய்ப்பாக, “ கலைக்குண்டான சந்திப்புக்கும் இந்த மாற்றத்துக்கும் தொடர்பு இருக்காது என மெய்யாக நம்புகிறேன். ஒருவேளை அப்படி இருக்குமானால், மிகவும் வருத்தத்துக்கு உரியது, துரதிர்ஷ்டவசமானது.
தவறான முன்னுரிமைகளுக்காக பொதுநலனை பலியிடுவதாகவும் இருக்கும்” என்று மம்தா கூர்மையாகவும் விமர்சித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து என்டிடிவிக்கு பேட்டியளித்த மம்தா, ”அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஓர் அதிகாரியை அவமானப்படுத்துவதன் மூலம் பிரதமரும் மத்திய அரசும் சொல்ல விரும்புவது என்ன? அவர்கள் என்ன கொத்தடிமைகளா? மத்திய அரசிலும் பல வங்க அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களை மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் நான் திரும்பப்பெற்றுக்கொள்ளவா, பிரதமர் அவர்களே.? மும்முரமான பிரதமர் அவர்களே? மன் கி பாத் பிரதமர் அவர்களே?” என்று மம்தா எதிர்க்கேள்வி எழுப்பி, சவால் விடுத்துள்ளார்.