கொரோனா முதல் அலையின்போது அதிக பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் இருந்தது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியிலும் தொற்று அதிகமாகப் பரவி பாதிப்பை உண்டாக்கியது. ஆனால் அங்கு கடைப்பிடிக்கப்பட்ட ’கட்டுப்பாட்டு வழிமுறை’யால் மளமளவென பாதிப்பு குறைந்து, தொற்றே இல்லாத நிலையும் ஏற்பட்டது.

 


மும்பை



 


இரண்டரை சதுர கிமீ பரப்பில் விரிந்திருக்கும் தாராவி பகுதியில், குடியிருப்புகள் மிகவும் நெருக்கமாக அடுத்தடுத்து அமைந்திருப்பதைப் பற்றி விளக்க வேண்டியது இல்லை. கொரோனாவுக்கான முக்கிய தடுப்புவழியே தனி மனித இடைவெளிதான் எனும்போது, இந்தப் பகுதியில் தொற்று ஏற்பட்டால் என்ன ஆகும் என பெரும் பீதி ஏற்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே தாராவியில் முதல் அலையின்போது தொற்று ஏற்பட்டு, மிக பரவல் வேகமெடுத்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த மாதம் 26ஆம் தேதிவரை இந்தப் பகுதியில் கொரோனா தொற்றியதால் 354 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி முதல் அதாவது இரண்டாவது அலைக் காலம் தொடங்கிய பின்னர் இறந்தவர்கள் 42 பேர்.

 




 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் குறிப்பாக மும்பையில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத் தொடங்கியிருந்தது. அந்த மாதத்தின் பாதிவாக்கில்தான் தாராவி பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பு ஆரம்பமானது. அடுத்து மார்ச்சில் கணிசமான அளவுக்கு மேலும் அதிகரித்த தொற்று, சென்ற மாதம் உச்சத்தைத் தொட்டது. தாராவியின் அதிகபட்ச அன்றாடத் தொற்றின் அளவு ஏப்ரல் 8ஆம் தேதி பதிவானது. அதுவே நூறுக்கும் கீழ் 99 எனும் அளவில்தான் இருந்தது.

 

அதன் பிறகு அங்கு தொற்று குறையத் தொடங்கியது. படிப்படியாகக் குறைந்துவரும் கொரோனா தொற்று, கடந்த புதனன்று 3 ஆகவும் மறுநாளில் 4 ஆகவும் பதிவானது. இதே நேரம், மும்பை மாநகரில் அன்றாடத் தொற்றின் அளவு இன்னும் நான்கு இலக்கத்திலேயே நீடித்துவருகிறது. தாராவியில் இப்போதைக்கு 50 பேர்தான் கொரோனா பாதிப்பில் இருக்கின்றனர். (அதாவது, தொற்று ஏற்பட்ட 6,802 பேரில் 6,398 பேர் குணமடைந்துவிட்டனர்.) இதேவேளை, தாராவிக்கு அருகில் இருக்கும் தாதர் பகுதியில் 204 பேர், மாகிம் பகுதியில் 254 பேர் பாதிப்பில் இருக்கின்றனர்.

 


 

இரண்டாம் அலையில் தாராவியில் தொற்று உச்சநிலைக்குச் சென்று மிகவிரைவில் குறைந்ததற்குக் காரணம், ’தாராவி மாடல்’ வழிமுறைதான் என்கின்றனர், மும்பை மாநகராட்சி சுகாதாரத் துறையினர். இந்த வழிமுறையை உலக சுகாதார நிறுவனமே முந்தைய அலையின்போது பாராட்டியது நினைவிருக்கலாம்.

கடந்த டிசம்பரிலும் ஜனவரியிலும் தொற்று மெதுவாகப் பரவியது. உஷாரான மாநகராட்சி சுகாதாரத் துறையினர், முதல் அலையில் கையாண்டதைப்போல, சோதனையையும் முதல்நிலைத் தொடர்புகளை அறிவதிலும் ஈடுபட்டனர். ”இப்படி தொற்று ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்ததால்தான், இந்த முறையும் கணிசமாக பாதிப்பு குறைக்கப்பட்டது” என்கிறார், மும்பை வடக்கு-ஜி பகுதி மாநகராட்சி உதவி ஆணையர் திகாவ்கர்.

எப்படியோ, குடிசைவீடுகளை அதிகம்கொண்ட தாராவியில், இரண்டாம் அலையிலும் தொற்றுப்பரவல் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பது, ஆறுதல் அளிக்கிறது.