காங்கிரஸ் தலைவரும், பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.சோனி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓ.பி. சோனி கைது
ஓ.பி. சோனி சண்டிகரில் கைது செய்யப்பட்ட நிலையில், அமிர்தசரஸுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவர் இன்று (ஜூலை 10) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2016 மற்றும் 2022 க்கு இடையில் ஓ.பி.சோனியின் சொத்துக்கள் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளதாக துறையை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார். ஓபி சோனி அமிர்தசரஸில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்தவர், அவர் கடந்த ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றபோது அவர் தொகுதியில் அவர் தோல்வியடைந்தார். 2021ல் கேப்டன் அமரீந்தர் சிங் நீக்கப்பட்டு சரண்ஜித் சிங் சன்னி முதல்வராகவும், ஓபி சோனி துணை முதல்வராகவும் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில்
இது தொடர்பாக விசாரணைக்கு அக்டோபர் 10, 2022 அன்று உத்தரவிடப்பட்டது. ஏப்ரல் 1, 2016 முதல் மார்ச் 31, 2022 வரை, முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.சோனி மற்றும் அவரது குடும்பத்தினரின் வருமானம் 4.5 கோடி என்றும், அவர் 12.5 கோடி செலவு செய்துள்ளதாகவும் புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த காலகட்டத்தில், ஓபி சோனி தனது மனைவி சுமன் சோனி மற்றும் மகன் ராகவ் சோனி பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
வழக்குப் பதிவு
விசாரணையைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 13 (1) (பி) மற்றும் 13 (2) ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஏஜென்சியின் செய்தித் தொடர்பாளர் சண்டிகரில் தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மான் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளது பஞ்சாப் அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளது.
எதிர்கட்சி ஒருங்கிணைப்பில் பிளவு ஏற்படுமா?
2024 பொதுத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பொது அணியை உருவாக்க முயற்சிக்கும் நேரத்தில், இந்த சம்பவம் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சோனி கைது செய்யப்பட்ட பிறகு, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் வார்ரிங் முதல்வர் பகவத் மானின் மற்றொரு திசை திருப்பும் நடவடிக்கை என்று குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும் பழிவாங்கும் அரசியல் ஒருபோதும் நல்ல விளைவை தராது என்றும் கூறியுள்ளார்.