வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். மேலும் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.


வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை:


இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வட இந்தியாவில் புயல் காரணமாக நேற்று கடும் மழை பெய்தது. டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்தது" என குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 


கடந்த 24 மணி நேரத்தில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளது. 1982 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜூலை மாதத்தில் ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை இதுவாகும். டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்தது. குருகிராமின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. மின்சாரம் தடைபட்டது.


டெல்லியில் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூலை 15 வரை லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, 17 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் 12 ரயில்கள் பாதை மாற்றிவிடப்பட்டுள்ளது என்றும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வடக்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு:


இதுகுறித்து வடக்கு ரயில்வேஸின் செய்தித் தொடர்பாளர் தீபக் குமார் கூறுகையில், "நான்கு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நோகன்வான் (அம்பாலா)-நியூ மொரிண்டா இடையேயும் நங்கல் அணை மற்றும் ஆனந்த்பூர் சாஹிப் இடையேயும் கிராத்பூர் சாஹிப் மற்றும் பாரத்கர் இடையேயும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.


இடைவிடாது கனமழை பெய்து வருவதால் டெல்லி பகுதியில் இருந்து ரயில்களை பாதுகாப்பாக இயக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெல்லி-சப்ஜி மண்டி பகுதியிலும், ரயில் நிலையத்தின் பகுதியிலும் தண்டவாளத்தில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 8 பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


ஃபிரோஸ்பூர் கான்ட் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், சண்டிகர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் சண்டிகரில் இருந்து அமிர்தசரஸ் சந்திப்பு எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை சென்ட்ரல் அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், தௌலத்பூர் சௌக் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.